காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் கோஸ்மரை தர்கா அருகில், அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வீடுகளில், நகரின் பூர்வீகமற்றவர்களைப் புதிதாகக் குடியமர்த்தப் போவதாகக் கூறி, அதைத் தடுக்கும் முகமாக இன்று கடையடைப்பு போராட்டத்திற்கும், மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை, காயல்பட்டினம் பிரதான வீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்று காலை முதல் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வங்கிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, டாக்ஸி வாகனங்கள் ஓடவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்புடன் காணப்படும் நகர வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
நகரின் தனியார் பள்ளிக்கூடங்கள் பல விடுமுறை அறிவித்துள்ள நிலையில் அரசுப் பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும், அப்பள்ளிகளில் மாணவ-மாணவியரின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது.
டீக்கடைகள் திறக்காததால், மிதிவண்டியில் டீ வியாபாரம் செய்வோருக்கு கிராக்கி அதிகமாக இருந்தது.
இத்தனைக்கும் இடையில், தலை-கால் வியாபாரம் மட்டும் நகரின் ஒருபகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன், துணை ஆய்வாளர் சுவாமிதாஸ் மேற்பார்வையில், காயல்பட்டினம் பேருந்து நிலையம், அஞ்சல் அலுவலகம், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனை, தாயிம்பள்ளிவாசல் முனை உள்ளிட்ட இடங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள காயல்பட்டினம் பிரதான வீதி - நெசவுத் தெரு முனையிலும் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை வாகனங்களில் நகர வீதிகளில் ரோந்துப் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. |