இவ்வாண்டின் யூஃபா ஜூனியர்ஸ் கால்பந்துப் போட்டி கோப்பையை காலரி பேர்ட்ஸ் அணி வென்றுள்ளது. விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ் விளையாட்டுக் கழகம் 5ஆம் ஆண்டாக நடத்தும் “யூஃபா ஜூனியர்ஸ் ட்ராஃபி 2010” கோப்பைக்கான கால்பந்து சுற்றுப்போட்டிகள் கடந்த 25.12.2010 முதல் 31.12.2010 வரை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப் போட்டியின் 31.12.2010 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், காயல்பட்டினம் அணிகளான காயல் யுனைட்டெட் அணியும் காலரி பேர்ட்ஸ் அணியும் மோதின.
ஆட்ட நேர இறுதி வரை இவ்விரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் சம நிலையில் இருந்ததால் டை ப்ரேக்கர் - சமன் பிரிப்பு முறை கையாளப்பட்டது. இதில், காலரி பேர்ட்ஸ் அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் த.பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். முன்னதாக, ஆட்ட இடைவேளையின்போது, சிறப்பு விருந்தினர்களுக்கு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ஹாஃபிழ் சுல்தான் கிராஅத் ஓதி பரிசளிப்பு விழாவைத் துவக்கி வைத்தார். முஹம்மத் அப்துல் காதிர் என்ற பாலப்பா வரவேற்றுப் பேசினார்.
பின்னர், வெற்றிக்கு முனைந்த காயல் யுனைட்டெட் அணிக்கான கோப்பை மற்றுமு ரூபாய் 1,000 பரிசுத்தொகையை சிறப்பு விருந்தினர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் வழங்கினார்.
வெற்றி பெற்ற காலரி பேர்ட்ஸ் அணிக்கு “யூஃபா ஜூனியர்ஸ் 2010” கோப்பை மற்றும் ரூபாய் 2,000 பரிசுத்தொகையை, சிறப்பு விருந்தினரான ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் த.பார்த்திபன் வழங்கினார்.
இச்சுற்றுப் போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசை நெல்லை யூத் அணியின் மோசஸ் என்ற வீரரும், மூத்த வீரர்களுக்கான பரிசுகளை காயல் யுனைட்டெட் அணியின் வாவு ஷாஹுல் ஹமீத், காலரி பேர்ட்ஸ் அணியின் பஷீர் அஹ்மத் ஆகியோரும், சிறந்த தற்காப்பு வீரருக்கான பரிசை காலரி பேர்ட்ஸ் அணியின் முஸ்தஃபா பாஸித் என்ற வீரரும் பெற்றனர்.
ஸலாஹுத்தீன் நன்றி கூறினார். பரிசளிப்பு விழாவில், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், செயலர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, லண்டன் டாக்டர் செய்யித் அஹ்மத், ஹாஜி மீரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தகவல்:
யூஃபா ஜூனியர்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக,
எஸ்.பி.பி.புகாரீ,
காயல்பட்டினம். |