காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) கோஸ்மரை தர்கா அருகில், அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வீடுகளில், நகரின் பூர்வீகமற்றவர்களைப் புதிதாகக் குடியமர்த்தப் போவதாகக் கூறி, அரசு அதனைத் தடுக்கக் கோரி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் நகர மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, நேற்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கடையடைப்பு போராட்டமும், நேற்று மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்கள் பின்வருமாறு:-
1. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை கோஸ்மரை தர்காவையொட்டியுள்ள சர்வே 358/2 நிலம் 4 ஏக்கர் 66 செண்டு இடம் தாவா சொத்து. இந்த இடத்தில் எம்.ஏ.ஜின்னா என்பவரிடம் மோசடி கிரையம் பெற்று 169 வீடுகளை தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் கட்டுகிறது. இந்த நிலம் தொடர்பாக திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 45/2009 எண் பாகப்பிரிவினை வழக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர், சுனாமி தாசில்தார் உள்ளிட்டோர் மீது காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள 59/2010 எண் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கினை விரைவுபடுத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வளவு விவகாரங்கள் இந்த நிலத்தில் இருக்க அவசர அவசரமாக இரவு பகலாக 169 வீடுகள் கட்டப்படுவது காயல்பட்டணத்தின் ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியும் வேதனையும் அடையச் செய்துள்ளது.
எனவே இந்த வீடு கட்டும் பணியை உடனடியாக நிறுத்தி இதுதொடர்பாக முழுவிசாரணை நடத்த உத்தரவிடும்படி தமிழ்நாடு அரசை காயல்பட்டணம் பொதுமக்களின் ஒன்றுபட்ட இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
2. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமியால் காயல்பட்டினத்தில் எத்தகைய சேதமும் ஏற்படவில்லை. சுனாமி பாதிப்பு இந்நகரில் இல்லை. எனவே சுனாமி குடியிருப்புகள் கட்ட தேவையில்லை என காயல்பட்டினம் நகராட்சியும், 11-06-2008, 19-02-2009 ஆகிய தேதிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.
ஆயினும் காயல்பட்டின கடற்கரையின் தென்பாகமுன் மங்களவாடி பகுதியில் 73 சுனாமி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடற்கரை பூங்கா பகுதியில் வசித்தவர்கள் அங்கு குடியேற்றபட்டும் பூங்கா பகுதி வீடுகள் காலி செய்யப்படவில்லை. அந்த வீடுகளை காலி செய்து பொதுமக்கள் நலனிற்கு பயன்படுத்த புதிது புதிதாக வெளியூர்வாசிகள் காயல்பட்டணம் கடற்கரையில் குடியேறுவதை தடுக்கவும் அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மேலும் கடல் அலையில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் அரசு வீடுகள் கட்டுவதற்கு கோஸ்டல் ரெகுலேஷன் ஸோன் என்ற சி.ஆர்.இஸட் (CRZ) தடை செய்யப்பட்ட இடத்தில் வீடுகட்ட உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3. தனி நபர் ஒருவர் தன் சொந்த நிலத்தில் கட்டிடம் கட்ட உள்ளாட்சி அமைப்புக்களின் வரைபட ஒப்புதல் தேவை என சட்டம் இருக்கும் போது ஒருமிகப்பெரிய திட்டம் நிறைவேற்றப்படும்போது ஊர்மக்களின் தடையில்லா சான்றோ காயல்பட்டினம் நகராட்சியின் ஒப்புதலையோ பெறாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.
4. காயல்பட்டினம் கடற்கரையில் கட்டப்படும் வீடுகளுக்காக மோசடி கிரையம் செய்து கொடுத்த அதற்கு துணை புரிந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
5. காயல்பட்டினத்தில் கடையக்குடி என்பது 470 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று பெருமைக்குரியது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டினத்தில் இருந்து வந்தவர்கள் இப்பகுதியின் பெயரை கொம்புத்துறை என மாற்றுவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. வருவாய்துறை தேர்தல் ஆணையம் நகராட்சி ஆவணங்களில் கடயக்குடி என்ற பாரம்பரிய பெயரே நீடிக்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
6. காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் 1100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரிய கலாச்சார சின்னமாகும். பெருமை மிக்க இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் வேம்பார், வைப்பார், சிப்பிகுளம் போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் இப்பகுதியின் பெயரை சிங்கித்துறை என மாற்றுவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து அரசு துறைகளின் ஆவணங்களிலும் இப்பகுதியின் பெயர் கற்புடையார் பள்ளி வட்டம் என்றே நீடிக்க இக்கூட்டம் சம்பந்தப்பட்ட பணிகளை கேட்டுக் கொள்கிறது.
7. தமிழக மீன்வளத்துறையின் தூத்துக்குடி உதவி இயக்குனர் அலுவலகம் காயல்பட்டினம் பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டு கொம்புத்துறை, சிங்கித்துறை துறைமுகங்கள் என பதிவு செய்வதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. காயல்பட்டினம் பெயரை சேர்ந்த துறைமுகம் பதிவு செய்ய இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் காயல்பட்டினம் மக்களின் அனுமதி பெறாமல் எண்ணற்ற பைபர்படகுகள், வல்லங்கள் மற்றும் கட்டுமரங்களை பதிவு செய்ய வேண்டாம் எனவும் மீன்வளத்துறையை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
8. காயல்பட்டினம் துறைமுகங்களுக்கான மகிமை கட்டணம் இந்நகருக்கே சொந்தமானது. அதை நிர்வகிக்கும் உரிமையும் காயல்பட்டினத்திற்கே உரியது. அந்த உரிமையை நிலைநாட்டியே தீர்வது என இக்கூட்டம் உறுதி மேற்கொள்கிறது.
9. காயல்பட்டினம் துறைமுகத்தை மையமாக வைத்து படகுகள் மற்றும் வல்லங்களில் பிடிபடும் மீன்களை ஏலம்விடும் போது இந்நகர மக்களின் உணவு தேவைக்கான மீன்களை உள்ளுர் சிறு வியாபாரிகளுக்கு ஏலம் விட்டு மற்றவற்றையே வெளியூர் பெரும் வியாபாரிகளுக்கு ஏலம்விட வேண்டுமென மீனவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
10. கடலோர மீனவ கிராமங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளைப் போன்று காயல்பட்டினமும் செயல்பட உரிமை உண்டு என்பதால் இந்நகர மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு கட்டுமர மீனவ சங்கத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
11. காயல்பட்டினம் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு நம்முடைய நியாயமான உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமென அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில் தேர்தலை புறக்கணிக்கும் கட்டாய நிலைக்கு இந்நகர மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை இக்கூட்டம் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது.
12. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் வேண்டுகோளை ஏற்று நம் உரிமைகளை நிலைநாட்ட முழு அடைப்பு மற்றும் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தக பெருமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், ஜமாஅத்தார், புறநகரபகுதிகளின் தலைவர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பளித்த காவல்துறையினருக்கும், செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை காயல் மகபூப் முன்மொழிய அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதை அங்கீகரித்தனர்.
தகவல்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமியிலிருந்து,
அப்துல் மாலிக்,
காயல்பட்டினம்.
|