Cancer Fact Finding Committee - CFFC சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புள்ளம் கொண்ட உலகளாவிய காயல் நல மன்றங்களுக்கும், காயலர்களுக்கும் CFFC யின் சார்பில் உளம்கணிந்த அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த சில வாரங்களாக காயல்பட்டினம் CFFC சார்பில் வெளிவந்து கொண்டிருக்கும் அறிக்கைகளும், வேண்டுகோள்களும் தாங்கள் யாவரும் அறிந்ததே!
CFFC - ஒரு தன்னிலை விளக்கம்:
CFFC எனபது ஒரு குறிப்பிட்ட இலக்குவை மட்டுமே நோக்கி பயணம் செய்யும் ஒரு தற்காலிக இயக்கம். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எல்லோருமே நமதூரில் தற்போது நிலவி வரும் ஆரோக்கிய சீரழிவை களைவதற்கான உடனடி தேவைகளை உணர்ந்தவர்களும், அதற்காக எனென்ன செய்ய வேண்டுமோ, அத்துனை தொழில் நுட்பங்களையும் நன்கு அறிந்தவர்கள் தான். தற்போது நமது ஊரின் மிக முக்கியமான பிரச்சினையாகிய உயிர் கொல்லி நோயாகிய கேன்சருக்கு, நமது ஊர் மிக சுலபமாக பல உயிர்களை காவு கொடுத்து வருகிற செய்தி உலகெங்கும் உள்ள காயலர்களின் நெஞ்சை உலுக்கிக்கொண்டு இருக்கிறது.
நம்மவர்கள் நிறைய பேசுகிறோம், எழுதுகிறோம் ஆனால் இதுவரை இந்த வியாதிக்கு என்ன காரணம் என்று யாரிடமும் எந்த ஆதரமும் இல்லாமல் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்த CFFC அதன் செயலாக்கங்களையும் அதற்காக ஆகும் செலவீனங்களையும் எல்ல காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பி வைத்து எல்லோருடைய ஆதரவிற்காகவும் வேண்டுகோள் அனுப்பப்பட்டது.
நமது ஊரின் கடல் / கிணற்று தண்ணீர், காற்று மற்றும் நமது உணவுப்பழக்கங்கள் எல்லாவற்றையும் தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற பரிசோதனை கூடங்களில் பரிசோதித்து, அங்கு பெறப்படும் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு, தமிழக மற்றும் நடுவண் அரசிற்கும், வெளிநாடுகளில் வாழும் காயலர்கள் ஆங்காங்கே இருக்கும் இந்திய தூதரகத்திலும் விண்ணப்பங்கள் கொடுக்கவும் CFFC தீர்மானித்தது.
இப்படிப்பட்ட, ஊர் நலனில் அக்கறைகொண்ட, ஊருக்காக உழைக்கத்துடிக்கின்ற சமூக ஆர்வலர்களின் கூட்டணிதான் CFFC . இதனைக் கருத்தில் கொண்டுதான் எல்லா காயல் நல மன்றங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உதவிக்கரம் வேண்டி வேண்டுகோள் விடுத்தது CFFC.
CFFCயின் அந்த வேண்டுகோளை வழக்கம்போல் ஏற்று, புற்றுநோய் ஒழிப்பு முயற்சியில் உலக காயல் நல மன்றங்களுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்து வரும் கத்தர் காயல் நல மன்றம் ரூ.50,000 வழங்கியமைக்கும், அதனைத்தொடர்ந்து ஜித்தா காயல் நற்பணி மன்றம் மற்றும் ரியாத் காஹிர் பைத்துல்மால் CFFCயை ஆதரித்தமைக்கும், மனமார்ந்த நன்றியினை இந்த தருணத்தில் பதிவுசெய்கிறோம்.
ஏன் CFFC யை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்?
கத்தர் காயல் நல மன்றம் மற்றும் பல்வேறு உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து இந்த கொடிய நோயை ஒழிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆற்றிவரும் செயல்பாடுகளும், அதன் அடிப்படையில் கிடைத்த அனுபவங்களையும், சென்னையில் முன்னனுபவமும் ஆற்றலும் மிக்க சமூக ஆர்வலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த CFFC யை ஆதரித்து வெற்றிபெற முனைவதுதனே யதார்த்தம்!
ஆனால் எங்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக மேலே சொல்லப்பட்ட மூன்று காயல் நல மன்றங்களைத் தவிர, இதர மன்றங்கள் இதுவரை தமது ஆதரவுக் கரத்தை நீட்டாதது மனதிற்கு கொஞ்சம் சலனமாகவே இருந்தாலும், வெற்றி என்பது நம் எண்ணத்தினாலேயே கிடைக்கிறது என்பதனை அல்லாஹ்வின் உதவியோடு CFFC உறுதியாக நம்புகிறது.
ஆனால் ஒரே இடத்தை அடைவதற்கு ஆளுக்கு ஒரு திசையில் ஏன் பயணிக்க வேண்டும்? அப்படி தனியாக செயல்பட்டு எதையும் சாதிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
அன்பு நண்பர்களே! இது செயலாற்றும் தருணம். அனைத்துலக காயல் நல மன்றங்களும் தத்தம் ஆதரவினை - சென்னையில் இருந்தும், ஊரில் இருந்தும் களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கும் செயல்வீரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எல்லா காயல் நல மன்றங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்:
நாம் எல்லோரும் காயலர்கள்தான், எல்லோரும் காயல் நலனை கருத்தில் கொண்டுதான் செயல்படுகிறோம். அப்படி இருக்கிற பட்சத்தில் நமக்குள் வேறுபாட்டிற்கே இடமில்லையே. ஓன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வே.
CFFC யின் செயல்பாடுகளில் இணைந்து செயலாற்ற விரும்பும், விரும்பாத மன்றங்கள், தங்களது மேலான கருத்தை நேரடியாக தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க எங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
எல்லாம் வல்ல இறைவன் நம் நல்ல முயற்சிகளுக்கு வெற்றியைத் தருவானாக ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். |