தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்க விழா ஜனவரி 24 அல்லது 25ம் தேதிகளில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்தமிழக மக்களின் பல ஆண்டு கோரிக்கையான தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவங்குவதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும், இலங்கை அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது. மேலும் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் பயணிகள் கப்பல் முனையத்திற்கான அனைத்து பணியும் நிறைவு பெற்றுவிட்டது.
பயணிகள் கப்பலை இயக்குவதற்கு 7 நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது.இதில் இருந்து தகுதி வாய்ந்த ஒரு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் 4ம் தேதி மும்பையில் வைத்து நடந்து முடிந்துவிட்டது. இதில் இருந்து ஒரு நிறுவனத்தை இந்திய கப்பல் போக்குவரத்து கழகமும், தூத்துக்குடி துறைமுக சபை கழகம் இணைந்து விரைவில் தேர்வு செய்து அறிவிக்கும். இந்த பணியும் முடிந்துவிட்டால் கப்பல் போக்குவரத்தினை தொடங்கிவிடலாம்.
பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழா குறித்து விவாதிப்பதற்காக தூத்துக்குடி துறைமுக சபை துணைத் தலைவர் சுப்பையா கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 24ம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கதிர்வேல் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தூத்துக்குடிக்கு வருகிறார். எனவே அன்றைய தினம் அல்லது அதற்கு மறுநாள் தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழா நடக்கும் என்றும் அதற்கான ஆயத்த பணிகள் தற்போது வேகமாக நடந்து வருவதாகவும் தூத்துக்குடி துறைமுக சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross