ஆறுமுகனேரியில் துணை மின்நிலையம் உள்ளது. அங்கிருந்து தான் திருச்செந்தூர், குரும்பூர் துணை மின் நிலையங்களுக்கும் அதைச் சார்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. அண்மைக் காலமாக ஆறுமுகனேரியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கடந்த மூன்று தினங்கள் ஆறுமுகனேரி இரவில் இருளில் முழ்கியது.
டிசம்பர் 28 ஆம் தேதி ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற்றதால் மின்தடை அமல் செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு தடை செய்யப்பட்ட மின்சாரம் மாலை 5.30 மணிக்குத் தான் சீரானாது.
ஆனால் சிறிது நேரத்தில் மின் தடை மீண்டும் ஏற்பட்டது. இரவு 10 மணிக்குத் தான் நிலைமை சீரானது. அதே போன்று புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 3.30-க்கு மின்தடை ஏற்பட்டது. காலை 9 மணிக்குத்தான் சீரானது.
இதனால் தேவாலயங்களில் புத்தாண்டு திருப்பலி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் பாதிக்கப்பட்டன. திங்கள்கிழமை மாலை மற்றும் இரவு மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட இப்பகுதி மக்களை மிகவும் அவதிக்குள்ளாக்கியது. இவ்வாறு அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மின்சாதனங்கள் மற்றும் தெருவிளக்குகள் பழுதாகிவிடுகின்றன.
ஆறுமுகனேரி பேரூராட்சித் தலைவர் சா.பொன்ராஜ் திங்கள்கிழமை திருச்செந்தூரில் நடந்த மின் குறை தீர்க்கும் நாளில் மின் வாரிய அதிகாரிகளிடம் நிலைமையை சீர் செய்ய வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.
இவ்வாறு அடிக்கடி மின் தடை ஏற்படுவது தொடர்பாக மின் வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது ஆறுமுகனேரி துணை மின் நிலையத்தில் உள்ள ஆறுமுகனேரி பகுதிக்கான மின்னூக்கி டிசம்பர் 5ஆம் தேதி எரிந்து விட்டது.
அன்றைய தினத்திலிருந்து ஆறுமுகனேரிக்கு காயல்பட்டினம் மின்னூட்டி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஆறுமுகனேரிக்கு காலை 8 மணிமுதல் 10 மணிவரை வழங்கப்பட்ட மின் தடை காயல்பட்டினம் நேரத்தில் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த முறை மூலம் மின் விநியோகம் ஆறுமுகனேரிக்கு வழங்குவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் செவ்வாய்க்கிழமை முதல் துண்டிக்கப்பட்டு தற்போது ஆறுமுகனேரிக்கு மின் விநியோகம் புன்னக்காயல் மின்னூட்டி மூலம் வழங்கப்படுகிறது.
இந்த மின்னூட்டி மூலம் தான் குடிநீர் நீரேற்று நிலையத்துக்கும் மின் சப்ளை செய்யப்படுகிறது என கூறப்படுகிறது. இந்த மின்னூட்டி பாதிக்கப்பட்டால் ஆத்தூரிலிருந்து திருச்செந்தூர் வரையும் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
மாதம் ஒன்றாகியும் எரிந்த ஆறுமுகனேரி மின்னூட்டிக்கு மாற்றாக வேறு மின்னூட்டி பொருத்தப்படவில்லை. ஆறுமுகனேரி மின்னூட்டி எரிந்து விட்டதால் வேறு மார்க்கத்தில் விநியோகம் வழங்குவதால் மின் தடை நேரங்களிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த மின்னூட்டிக்கு உரிய நேரத்தில் மின் தடை செய்யப்படுவதால் இந்தப் பிரச்னை எனக் கூறப்படுகிறது.
ஆறுமுகனேரி மின்னூட்டியை புதிதாக அமைத்து இருளில் தவிக்கும் நிலைமையை தவிர்க்குமாறு ஆறுமுகனேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross