தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூபாய் 2.67 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் சிறுபான்மையினர் நல ஆய்வுக்குழு உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட சிறுபான்மையினர் நல ஆய்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்ச திட்டங்களின் செயல்பாடு குறித்து சுதர்சன நாச்சியப்பன் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.க. வீரணன், மகளிர் திட்ட அலுவலர் செல்வம், சமூக நல அலுவலர் முத்துநாயகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 14.5 லட்சம். கிறிஸ்தவர்கள் 2,62,817 பேர், இஸ்லாமியர்கள் 72,875 பேர், சீக்கியர்கள் 52 பேர், பௌத்தர்கள் 21 பேர் உள்ளிட்ட சிறுபான்மையினர் 3,35,765 பேர் உள்ளனர்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கட்டாயக் கல்வி, தொழிற்கல்வி, மேல்நிலைக் கல்வி போன்றவற்றில் சிறுபான்மையினருக்கு தனிப்பட்ட சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு ரூபாய் 2.67 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 176 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 2.51 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து தெரியவில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தகவல்:
தினகரன்
|