காயல்பட்டினம், கீழக்கரை உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் ஊர்களில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதங்களிலும், மே மாதங்களிலும் திருமண நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறும்.
காயல்பட்டினத்தில் இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 30 தம்பதியருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமண நிகழ்ச்சி நடைமுறைகள்:-
மணமேடை:
பெரும்பாலும் மணமக்களின் இல்லங்களையொட்டிய தெருப்பகுதிதான் திருமண மேடையாக இருக்கும். எனினும், நகரின் கனிசமான மக்கள் பள்ளிவாசல்களிலும், திருமண மண்டபங்களிலும், மத்ரஸா, சங்கங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் தமது இல்லத் திருமணங்களை நடத்தும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாலை அழைப்பு (Reception) நிகழ்ச்சி:
நகரின் பெரும்பான்மையோர் திருமணத்தையொட்டி அழைப்பு (reception) நிகழ்ச்சி நடத்துவர். இரவு திருமண நிகழ்ச்சியெனில் அன்றிரவிலோ, பகல் திருமணம் எனில் மறுநாள் காலையிலோ திருமண நிகழ்ச்சி நடைபெறும். திருமண நிகழ்ச்சியில்போது, வந்தோரை வரவேற்பது சிரமமென்று கருதியே, முந்திய மாலையில் அழைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் வழமை நடைமுறையில் உள்ளது.
அழைப்பு நிகழ்ச்சிக்கு வருவோருக்கு பன்னீர் தெளித்து, மலர் - கற்கண்டு கொடுத்து, சாக்லேட் போன்ற இனிப்பு மிட்டாய்களை, புத்தாடை அணிந்த சிறுவர்கள் கொண்டுவந்து கொடுப்பர். சில இடங்களில் குளிர்பானம் வழங்கப்படுவதுமுண்டு.
மணமகன் நகர்வலம்:
திருமணங்களில் மணமகனுக்கு மாலை அணிவிக்கப்பட்டிருக்கும். அரபி கீதங்கள் பாடப்பட்டு அவர்கள் தம் வீடுகளிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலோ அல்லது கால்நடையாகவோ, முக்கிய தெருக்கள் வழியாக நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, திருமண நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு அழைத்து வரப்படுவர். மணமகனுடன், அவர் வீட்டிலும், மணமகள் வீட்டிலுமுள்ள சிறுவர்களுக்கு சிறிய அளவிலான மாலை அணிவிக்கப்பட்டு, மணமகனுடன் கைகோர்த்த குட்டி மாப்பிள்ளைகளாக அவர்களும் இந்நகர்வலத்தில் உடன் வருவர். மற்றொரு சாராரிடம் இந்த மாலை அணியும் வழக்கம் கிடையாது.
மணமேடை நிகழ்ச்சிகள்:
இருமண வீடுகளிலுள்ள முக்கிய ஆண் உறவினர்கள் சூழ அமர்ந்திருக்க, மேடையின் நடுவில் மணமகன் அமர்ந்திருப்பார்.
ஹாஃபிழ்கள் நிறைந்த காயல்பட்டினத்தில், திருமண நிகழ்ச்சியைத் துவக்குவதற்காக மணவீட்டைச் சார்ந்த ஒருவர் திருமறை குர்ஆன் வசனங்களிலிருந்து கிராஅத் ஓதுவார்.
பின்னர் வரவேற்புரை நிகழ்த்தப்படும். தொடர்ந்து வாழ்த்துரை, அரபி மொழியில் குத்பா பேருரை, ஈஜாப் கபூல் எனும் வாழ்க்கை ஒப்பந்தம் ஆகியன மார்க்க அறிஞர்களால் நடத்தப்படும். நன்றியுரைக்குப் பின் ஒரு மார்க்க அறிஞர் துஆ கூட்டுப் பிரார்த்தனை செய்வார்.
நகரின் மற்றொரு சாராரது திருமண நிகழ்ச்சியில், திருமண உரை ஒன்றை மார்க்க அறிஞர் தமிழில் வழங்குவார். அதனைத் தொடர்ந்து மணப்பெண்ணின் வலீ - பொறுப்பாளர் மணமகனிடம் வாழ்க்கை ஒப்பந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்வார். நன்றியுரைக்குப் பின், “ஸுப்ஹானகல்லாஹும்ம...” எனத் துவங்கும் கஃப்ஃபாரா துஆ ஓதி அமர்வு நிறைவுறும்.
இணைக்கப்பட்ட கூடுதல் படம்...
இவ்வாறாக, திருமண மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றதும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டவர்கள் மணமகன், இருமண வீடுகளின் முக்கிய அங்கத்தினருடன் முஸாஃபஹா (கைலாகு) செய்து, வாழ்த்து தெரிவிப்பர்.
மணப்பெண்ணைச் சந்தித்தல்:
மறுபுறம், மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு பெண்கள் பகுதியில் மேடையில் அமர்த்தப்பட்டிருப்பார். திருமண வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி முடிவுற்றதும், மணமகன் அம்மேடைக்கு வந்து மணமகளின் முன்னெற்றி முடியைப் பிடித்தவாறு சிறிது நேரம் நிற்பார். பின்னர் மார்க்க அறிஞர் ஒருவர் துஆ - பிரார்த்தனை ஓத, அனைவரும் “ஆமீன்” கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்வர்.
(மற்றொரு சாரார் இதே நிகழ்ச்சியை பெண்ணின் “மஹ்ரமான” (திருமண உறவுக்குத் தடை செய்யப்பட்ட தந்தை, தாய்மாமன், சகோதரன், மாமனார் உள்ளிட்ட) ஆண்களும், ஆணுக்கு “மஹ்ரமான“ (திருமண உறவுக்குத் தடை செய்யப்பட்ட தாய், தந்தை-தாயுடன் பிறந்த சகோதரிகள், உடன்பிறந்த சகோதரிகள் உள்ளிட்ட) பெண்களும் இருக்க, நபிகளார் கற்பித்த துஆ ஒன்றை மட்டும் மணமகன் சொல்லிப் பிரார்த்தித்து, பெண்ணின் முன்னெற்றி முடியைப் பிடித்திருப்பார்.)
மஹர் எனும் மணக்கொடை:
பின்னர், மணமகளுக்கு மணமகன் மணக்கொடையாக “மஹர்” கொடுப்பார். அது பணமாகவோ, தங்கமாகவோ, தங்க நகையாகவோ, இதர விலைமதிப்புள்ளவையாகவோ இருக்கும்.
மணமக்களிடையே விளையாட்டுகள்:
முற்காலங்களில் திருமண உறவு குறித்து மணமக்களுக்கு போதிய அறிவு இருக்காது என்பதைக் கருத்தில் கொண்டு, திருமணம் முடிந்த இரவில் மணமகன் - மணப்பெண்ணுக்கிடையில் பல்லாங்குழி, ஒருவர் கையிலிருந்து மற்றவர் வெற்றிலையைப் பிடுங்குதல் உள்ளிட்ட - மண உறவை உணர்த்தும் ஏற்படுத்தும் விளையாட்டுகள் விளையாடச் செய்யப்படும். இருமணவீட்டு பெண்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, மணமகன்-மணமகளுக்கிடையில் இந்த விளையாட்டுகள் அரங்கேற்றப்படும். தற்காலத்தில் அது நகரில் பெரும்பாலும் குறைந்திருந்தாலும், இன்றளவும் பல இல்லங்களில் அவ்விளையாட்டுகள் அரங்கேற்றப்படுகிறது.
விருந்து ஏற்பாடுகள்:
அழைப்பு முடிந்த அன்றிரவு ஒரு விருந்து நடைபெறும். அவ்விருந்தில் வட்டார உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருப்பர். திருமண நிகழ்ச்சி முடிந்து நடத்தப்படும் மதிய விருந்தில், சொந்தங்கள், தூரத்து உறவினர்கள், நண்பர்கள், உடன் படித்தவர்கள், ஊரில் பொதுநலப் பணிகளிலிருப்போர், நகரப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அழைக்கப்பட்டு விருந்து கொடுத்து உபசரிக்கப்படுவர். எனினும், இந்த விருந்தின் அளவு அவரவர் வசதிக்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ அமையும்.
நகரின் மற்றொரு சாரார் நடத்தும் திருமணம் இந்த நடைமுறையிலிருந்து பெரும்பாலும் வேறுபட்டிருக்கும். அதாவது, மாலையில் நடத்தப்படும் அழைப்பு நிகழ்ச்சிகள் தேவையற்றது என்று கருதி அதே மாலையிலேயே திருமண நிகழ்ச்சியை நடத்துவோரும் உண்டு. அல்லது அழைப்பு நிகழ்ச்சி இல்லை என்ற நிலையுடன் அன்றிரவோ அல்லது மறுநாள் காலையிலோ திருமண நிகழ்ச்சி நடத்தப்படும். திருமண நிகழ்ச்சி நிறைவுற்றதும் மேற்சொன்ன அடிப்படையில் நகர மக்கள் அழைக்கப்பட்டு, விருந்து கொடுக்கப்படுவர்.
விருந்து பதார்த்தங்கள்:
விருந்து என்பது பெரும்பாலும் வெறும் சோறு, களறி கறி, கத்திரிக்காய் பருப்பு, புளியாணம் (ரசம்) ஆகிய பதார்த்தங்களைக் கொண்டிருக்கும். வெறும் சோற்றுக்கு பதில் நெய்ச்சோறு சமைக்கப்பட்டால் புளியாணம் அதில் இடம்பெறாது.
சில நேரங்களில், பிரியாணி பரிமாறப்படும். காயல்பட்டினம் முறைப்படி பிரியாணி சமைப்பது பாரம்பரிய பழக்கமாக இருந்தாலும், சுவைமிக்க அந்த உணவுப் பதார்த்தம் கூடுதலாக உட்கொள்ள இயலாது என்பதால் சிலர் ஆம்பூர் பிரியாணி சமைப்பர். காயல்பட்டினம் பிரியாணியில் காரம் குறைவாகவும், முந்திரி பருப்பு உள்ளிட்ட மேவா பொருட்கள் அதிகமாகவும் இருக்கும். ஆம்பூர் பிரியாணி உள்ளிட்ட இதர பிரியாணி வகைகளில் காரம் சற்று தூக்கலாகவும், மேவா பொருட்கள் இல்லாமலும் இருக்கும்.
எத்தனை உணவு வகைகள் இருந்தபோதிலும், காயல்பட்டினம் நகர மக்கள் பெரும்பாலும் விரும்புவது, வெறும் சோறு, இறைச்சி, கத்திரிக்காய் பருப்பு, புளியாணம் கொண்ட களறி சாப்பாட்டைத்தான்.
உண்ணும் முறை:
பெரும்பாலும் ஒரே தட்டில் பலர் சாப்பிடும் வகையில் உண்ணும் முறை இருக்கும். உண்ணும் உணவைக் கொண்ட தட்டு சஹன் அல்லது தாலம் என்றழைக்கப்படும். ஆண்களெனில் ஒரு சஹனுக்கு இருவரும், பெண்களெனில் ஒரு சஹனுக்கு மூவர் அல்லது நால்வரும் ஒன்றாக அமர்ந்து, ஒரே தட்டில் உண்ணுவர். சில நேரங்களில் ஒரு சஹனுக்கு இரண்டு பெண்கள் அமர்வதும் உண்டு.
உணவுத்தட்டு அமைப்பு:
தட்டில் சோறு பரத்தப்பட்டிருக்கும். அதன் மேல் இரண்டு கிண்ணங்களில் இறைச்சியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் பருப்பும், மற்றொரு கிண்ணத்தில் புளியாணமும் வைக்கப்பட்டிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு வரை இக்கிண்ணங்கள் சிட்டி என்றழைக்கப்படும் மண் கிண்ணங்களாக இருந்தன. சஹன் - தாலங்கள் செம்பாலானதாக இருந்தன. நாளடைவில் தாலங்கள், கிண்ணங்கள் அனைத்தும் சில்வர் பாத்திரங்களாக முற்றிலும் மாறிவிட்டன. அதுபோல தண்ணீர் மண் கலசங்களில் பரிமாறப்படும். தற்போது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தண்ணீர் தாலத்துடன் வைக்கப்படுகிறது.
ஒரே சஹனில் சாப்பிடும் வழக்கமில்லாத - முஸ்லிமல்லாத விருந்தினர்கள் மற்றும் வெளியூர் விருந்தாளிகளுக்கு தனித்தனி தட்டில் அல்லது வாழை இலையில் விருந்து உபசரிப்பு நடைபெறும்.
திருமணத்திற்கு பொதுவாகவும், விருந்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பொதுமக்கள் அழைக்கப்படுவர்.
கத்னா - விருத்தசேதன நிகழ்ச்சிகள்:
முற்காலங்களில், திருமண நிகழ்ச்சிகளையொட்டி திருமணம் முடிந்த இரண்டு அல்லது மூன்று தினங்கள் கழித்து, மணவீட்டாரின் இல்லங்களிலிருக்கும் சிறுவர்களுக்கு கத்னா (விருத்தசேதனம்) செய்வர். இதையொட்டி, அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அரபி கீதங்கள் பாடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்திலோ அல்லது கால்நடையாகவோ நகர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர். பின்னர், கைதேர்ந்த நாவிதர் ஒருவர் அச்சிறுவனுக்கு விருத்தசேதனம் செய்வார்.
ஆனால், குழந்தை பிறந்த சில தினங்களிலேயே விருத்த சேதனம் செய்யும் வழக்கம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் காயல்பட்டினத்தில் பழக்கமாகிப் போனதையடுத்து, சிறுவர்களாக இருக்கும் நிலையில் கத்னா செய்வது மிகவும் குறைந்து, தற்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டும் நடைபெறுகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட வழமைகள் விரிவையஞ்சி குறைந்தளவுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. |