உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தை, கல்வித்துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளுக்கும் அனைத்துலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பாக்குவது குறித்தும், காயல்பட்டினம் நகர்மன்றத்தை நகர்நலனை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடியவர்களைக் கொண்டு வலுவானதாக்குவது குறித்தும் அனைத்துலக காயல் நல மன்றங்கள் பரிசீலிக்க வேண்டும் என காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.ஏ.நூஹ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் அனைத்துலக காயல் நல மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது தாயகமாம் காயல்பட்டினம் அனைத்துத் துறைகளிலும் சிறந்தோங்க வேண்டும் என உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்களாகிய நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பலவிதமான செயல்திட்டங்களை தேவைப்படும் நேரங்களிலெல்லாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். இறையருளால் அவற்றுக்கு இயன்றளவு வெற்றியும் கிடைத்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்!
இச்செயல்திட்டங்களில், அனைத்துலக காயல் நல மன்றங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானதும், குறிப்பிடத்தக்கதுமாகத் திகழ்ந்து வருவது கண்டு நகர மக்கள் மிகுந்த மகிழச்சியிலும், மன திருப்தியிலும் உள்ளனர்.
இந்நிலையில், வருங்கால நன்மை கருதி இரண்டு முக்கிய விஷயங்களை வேண்டுகோளாக நமது காயல் நல மன்றங்களின் பார்வைக்கு முன்வைக்க ஆசிக்கிறேன். இதுகுறித்து, நான் சார்ந்துள்ள காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் கூட்டங்களிலும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வலியுறுத்தி வந்துள்ளேன் என்றாலும் கூட, இதுகுறித்து அனைத்து காயல் நல மன்றங்களும் தமக்கிடையில் கலந்தாலோசித்து முடிவெடுத்தால் மட்டுமே இச்செயல்திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என்பதைக் கருத்தில் கொண்டு இவ்விரு வேண்டுகோள்களையும் உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்:-
இக்ராஃவை அனைத்துத் துறைகளுக்கும் கூட்டமைப்பாக்குதல்:
நகரின் பல கல்வி பணிகளை ஒருங்கிணைத்து நமது இக்ராஃ கல்வி சங்கம் செவ்வனே செய்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்... உலக அளவில் உள்ள காயல் நல மன்றங்கள் ஆர்வமுடன் இக்ராஃவின் அறப்பணிகளுக்கு உதவி புரிந்து வருவது காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இதுபோல் நம் நகரில் மேற்கொள்ளப்படும் மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த உதவிகளும், சேவைகளும் ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென பலர் ஆர்வமாக உள்ளதை நாமனைவரும் நன்கறிவோம்.
நகரில் தற்போது நிலவி வரும் உடல் நலன் குறித்த பிரச்சனைகளை மனதிற்கொண்டு நாம் அனைவரும் இக்ராஃ அமைப்பினை மருத்துவ உதவி, சிறுதொழில் உதவி உள்ளிட்ட காயல் நல மன்றங்களின் அனைத்து சேவைப் பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக இக்ராஃ அமைப்பினை சட்ட ரீதியாக மாற்றியமைக்க அனைத்து சங்கங்களும் துரித முறையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுகிறேன்.
வலுவான நகர்மன்றம் அமைத்தல்:
மேலும் நகரை அதிகார ரீதியாக கட்டுப்படுத்தும் முக்கிய மக்கள் அமைப்பான நகராட்சி திறம்பட செயல்பட, வரும் அக்டோபர் மாதம் நடைபெறுவதாக எதிர்பார்க்கப்படும் நகராட்சித் தேர்தலுக்கு முன்னரே அனைத்துலக காயல் நல மன்றங்களும், நகரிலுள்ள தொண்டு நிறுவனங்களும், அனைத்து ஜமாஅத்தினரும் இது குறித்து கலந்தாலோசனைகளை மேற்கொண்டு,
நகராட்சி தேர்தலில் சேவை மனப்பான்மை கொண்ட, அதே நேரத்தில் நிர்வாகத் திறமை கொண்ட வேட்பாளர்களை நிறுத்த முயற்சி செய்யவேண்டும் என கேட்டுகொள்கிறேன்.
அந்தந்த வார்டுகளை உள்ளடக்கிய ஜமாஅத்தினர் தமக்கிடையில் கூட்டுக்கூட்டங்களை நடத்தி தமக்கிடையில் மேற்கண்ட தகுதிகள் வாய்க்கப்பெற்ற நல்லவர்களை இனங்கண்டு முன்னிறுத்தவும், உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் காயலர்கள் இவ்வாறான தன்னலமற்ற கூட்டமைப்புகளால் எடுக்கப்படும் நன்முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் பணிவோடும், மிகவும் வலியுறுத்தியும் கேட்டுக் கொள்கிறேன்.
இதுகுறித்த முறையான கடிதத்தை அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் முறைப்படி விரைவில் அனுப்பி வைக்கிறேன்.
இவ்வாறு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |