தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணம் மற்றும் நகைகளைக் கொண்டு செல்வது குறித்து வணிகர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
வரும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்வதால் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பின்போது அப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி தகுந்த ஆவணங்களுடன் பொருட்களைக் கொண்டு செல்வது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக தொழில் வர்த்தக சபையினர், வணிகர்கள் ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டம் 19.03.2011 அன்று மாலை 05.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிப்பிக் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழில் வர்த்தக சபையினர், நகைக்கடை உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வணிகர்களும் கலந்துகொண்டு, தேர்தல் விதிமுறைகளை அறிந்துகொண்டு, அதன்படி செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தெரிவிக்கிறது. |