உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பாக தற்போது காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் செயல்படுத்தப்படுவதைப் போல, மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கலந்தாலோசிப்பதற்காக பல்வேறு காயல் நல மன்றங்களின் செயற்குழு உறுப்பினர்கள், உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டம் 14.03.2011 திங்கட்கிழமை இரவு 07.30 மணிக்கு இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பல்துறை கூட்டமைப்பின் அவசியம்:
இக்கூட்டத்தின்போது, கல்விக்கான ஒருங்கிணைந்த கூட்டமைப்பாக இக்ராஃ சிறப்புற செயல்பட்டு வருவதைப் போன்று, மருத்துவம் உள்ளிட்ட - உலக காயல் நல மன்றங்களின் இதர துறைகளுக்கும் பொதுவான கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் அல்லது இக்ராஃ நிர்வாகத்தின் கீழ் இதற்காக ஒருவரை பணியமர்த்தி ஒருங்கிணைந்து செயலாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அனைத்துலக காயல் நல மன்றங்களும் தங்களது கூட்டங்களில் கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மானத்தின் அடிப்படையில் இக்ராஃ நிர்வாகத்திற்கு வேண்டுகோளாக அனுப்பி வைக்கலாம் எனவும் அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டமைப்பால் விளையும் நன்மைகள்:
இவ்வாறு செய்வதன் மூலம், காயல்பட்டினம் நகரில் பெருகி வரும் நோயாளிகள் பற்றியும், அவர்கள் அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கு அனுப்பி வைத்திடும் அவசர விண்ணப்பங்களைப் பெறல், அவற்றைப் பரிசீலித்தல், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு குறித்த நேரத்தில் உதவிகளை வழங்கல் ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் ஏற்படும் கால விரயத்தைத் தவிர்த்திடவும்,
ஒரே நபர் பல்வேறு அமைப்புகளுக்கு தேவையின்றி விண்ணப்பிப்பதைத் தவிர்த்திடவும், அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைந்த இச்செயல்பாட்டின் மூலம் உதவித்தொகைகள் கூடுமான வரை முழுமையாகவும், விரைவாகவும், முறையாகவும் கிடைக்கச் செய்திட இயலும் என்றும் அக்கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
கூட்டமைப்பின் செயல்பாடு:
இந்த ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் செயல்பாட்டிற்கென தனியாக ஒரு நபரை ஊதிய அடிப்படையில் பணியமர்த்தி, அவரிடம் அதன் பொறுப்புகளை ஒப்படைக்கலாம் என்றும், அவ்வாறு நியமிக்கப்படும் அவரை இக்ராஃவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கச் செய்யலாம் எனவும்,
மருத்துவ உதவிகளுக்கென ஆலோசனைக் குழு அமைத்து, அதில் ஆர்வமான மருத்துவர்களை உள்ளடக்கி செயலாற்றலாம் எனவும், காயல் நல மன்றங்களின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதியை இந்தக் குழுவில் அங்கம் வகிக்கச் செய்யலாம் எனவும், காயல் நல மன்றங்களுக்கு தரப்படும் விண்ணப்பங்களை ஊரிலேயே விசாரணை செய்து, தகுதியானவற்றை மட்டும் அம்மன்றங்களுக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் அக்கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவம் போன்று சிறுதொழில் உதவிக்கும் இதே திட்டத்தின் கீழ் இணைத்து செயல்படச் செய்யலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் செயற்குழு உறுப்பினர் ஜே.செய்யித் ஹஸன், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோரால் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில், ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி சோனா ஷாஹுல் ஹமீத், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், அமீரக காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தைச் சார்ந்த ஹாஜி கிங் இப்றாஹீம், மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) செயற்குழு உறுப்பினர் சாமுனாலெப்பை, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளரும், கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுமான எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர். |