ரியாத் தமிழ் தஃவா ஒன்றிய ஏற்பாட்டில் கடந்த ஜூலை 1 அன்று இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காயலர்கள் உட்பட ரியாத் வாழ் தமிழர் பலர் கலந்துக்கொண்டனர்.
இது குறித்து ஏற்பாட்டு குழு சார்பாக ஷாதுலி (அபு முஹம்மது) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறைவனின் கருணையால் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும், சில தமிழ்பேசும் சகோதரர்களின் அனுசரணையுடனும் இம்மாத சன்மார்க்க தஃவா நிகழ்ச்சி சென்ற 29/07/1432 (01 July 2011) அன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகை முதல் இஷா வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக இமாம் முஹம்மத் பின் ஸுஊத் பல்கலைக்கழக மாணவர் அஷ்ஷைக் இம்தியாஸ் (நளீமி) அவர்கள் 'வல் அஸ்ர் அத்தியாயத்திலிருந்து நாம் பெறவேண்டிய பாடங்கள்" எனும் தலைப்பில் குத்பாப் பிரசங்கத்தை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் 'குறிப்பிட்ட அத்தியாயத்தில் இறைவன் கூறியுள்ள நான்கு பண்புகளும் யாரிடம் காணப்படவில்லையோ அவரை இறைவன் துர்ப்பாக்கியவான் என வர்ணித்துள்ளதாக" எடுத்துரைத்தார்.
ஜும்ஆத் தொழுகையை அடுத்து ரவ்ழா தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷைக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) அவர்கள் 'விடுமுறையை நாம் எவ்வாறு கழிக்க வேண்டும்?" எனும் தலைப்பில் ஓர் சிற்றுரை நிகழ்த்தினார். "விடுமுறை என்ற பெயரில் இஸ்லாம் அனுமதிக்காத பல்வேறு செயல்களில் சுதந்திரமாக ஈடுபடும் பலர் இறைவனை மறந்துவிடுகின்றமை இறைவனை நன்றி மறக்கும் செயலாகும்" என அவரது உரையில் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து வழமைபோன்று இளைஞர் சிறுவர்களுக்கான கால் பந்தாட்டம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற அதேசமயம் பெண்கள் பகுதியிலும் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து பகலுணவும், ஓய்வும் வழங்கப்பட்டு மறு நிகழ்ச்சிகள் அஸர் தொழுகையின் மறுகனமே ஆரம்பமாகின.
ஆரம்ப நிகழ்வாக அல்குர்ஆன் பறை சாற்றும் நபிமார்களின் பிரார்த்தனைகளை உள்ளடக்கிய வினாத்தாள் கலந்துகொண்டோர் சகலருக்கும் வழங்கப்பட்டு அதிக புள்ளிகளைப் பெற்ற மூன்று சகோதரிகள் நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆண்கள் பெண்கள் பிரிவுகளில் திறந்த பேச்சு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் சகோதரர் ஜாபிர் 'அல் குர்ஆனின் சிறப்பும், மகிமையும்" எனும் தலைப்பிலும், சகோதரர் அமீர் 'அறிவுக்கு வித்திட்ட இஸ்லாம்' எனும் தலைப்பிலும், சகோதரர் நிஸ்தார் 'பர்ளான மற்றும் நபிலான தொழுகைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம்" எனும் தலைப்பிலும் சகோதரர் உபைதுல்லாஹ் 'நோன்பின் மூலம் ஒருவன் அடையும் பிரதான பயன் இறையச்சமே' எனும் தலைப்பிலும் ஐவைந்து நிமிடங்கள் உரையாற்றினர். அவ்வுரைகளுக்கு மத்தியில் சகோதரர் ளாபிர் 'அல்லாஹ்.............. லா இலாஹ இல்லல்லாஹ்........... என்று ஆரம்பித்து சிறந்த கருத்துக்களை உள்ளடக்கிய ஓர் அழகிய கீதத்தைப் பாடி சபையோரை மகிழ்வித்தார்.
அந்நிகழ்ச்சி முடிவடைய 'ரமழானை வரவேற்பது எவ்வாறு' எனும் கருப்பொருளில் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் பல்கலைக்கழக மாணவர் அஷ்ஷைக் ஷாஹுல் ஹமீத் அவர்களின் விஷேட உரை இடம்பெற்றது. அவர் தமதுரையில் 'அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்காக ரமழானில் நாம் மேற்கொள்ள வேண்டிய வணக்கங்கள் எவை? என்பதைப் பட்டியலிட்டுக் கூறியதோடு நோன்பு நோற்ற பலர் பாவக் கிரியைகளில் நேரங்களை வீணாகக் கழிப்பதனால் இறையருளை விட்டும் தூர எறியப்படுவதாகவும்" எடுத்துக் கூறினார்.
மஃறிப் தொழுகையை அடுத்து கிரிக்கெட் கால் பந்தாட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகளின் இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நடைபெற்று நன்றியுடையுடன் நிறைவுபெற்றது.
சகல நிகழ்ச்சிகளும் சிறப்பாக நிறைவுபெற வாய்ப்பளித்த வல்லவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்....
முக்கிய அறிவித்தல்கள்:
<> இன்ஷா அல்லாஹ் தமிழ் தஃவா ஒன்றியத்தின் ரமழான் மாத விஷேட நிகழ்ச்சி பிறை 19 வியாழன் மாலை இப்தார் முதல் ஸஹ்ர் முடிவும் வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் விஷேட பயான், கியாமுல் லைல் மற்றும் பல விஷேட இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
<> சிறுவர்களுக்காக குர்ஆன் மனனப் போட்டி ஒன்றையும், வருடா வருடம் நடைபெற்று வரும் 'முஸாபகது ரமழான்" வினா விடைப் போட்டியையும்; ரமழானில் நடாத்த தமிழ் தஃவா ஒன்றியம் உத்தேசித்துள்ளது.
<> ரமழான் முதல் வாரத்தில் குடும்பங்களுக்கான உம்ராப் பயண ஏற்பாடுகளும் தமிழ் தஃவா ஒன்றியத்தினால் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரியாதில் குடும்பமாக வசிப்போர் மாத்திரம் இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன் முற்பணம் செலுத்திப் பெயர்களைப் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தமிழ் தஃவா ஒன்றியம் - ரியாத் - சார்பாக,
ஷாதுலி (அபூ முஹம்மத்),
குறுக்கத் தெரு. |