சிறப்புத் தகுதி மதிப்பெண் பெற்ற காயல்பட்டினத்தைச் சார்ந்த ஏழை-எளிய மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர பொருளாதார உதவி புரிவதைக் குறிக்கோளாய்க் கொண்டு ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நலச் சங்கம் (கஸ்வா) அமைப்பின் சார்பில், இம்மாதம் 24ஆம் தேதியன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட இந்திய சிவில் சர்வீஸ் படிப்புகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.
11ஆம், 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்காக நடத்தப்படும் இம்முகாமில், சென்னை கிரஸெண்ட் ஐ.ஏ.எஸ். கல்வி வழிகாட்டு மையத்தின் இயக்குனர் முனைவர் ஐ.முஹம்மத் பிலால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வழிகாட்டுரை வழங்கவுள்ளார்.
சிவில் சர்வீஸ் படிப்புகள் பற்றிய தகவல்கள், முஸ்லிம் சமுதாயம் அக்கல்வியைப் பயில வேண்டியதன் அவசியம், இக்கல்விக்காக முஸ்லிம் சமுதாய மாணவர்களுக்கு பல்வேறு இடங்களிலும் கிடைக்கப்பெறும் வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள், இப்படிப்புகளுக்கான கல்வித்தகுதி, அதற்கு விண்ணப்பிக்கும் முறைமைகள் குறித்து அவரது உரையில் பல முக்கிய தகவல்களைத் தரவுள்ளார்.
இந்நிகழ்ச்சியை உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் ஒருங்கிணைக்கவுள்ளது. இதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் 14.07.2011 அன்று இரவு 07.00 மணிக்கு இக்ராஃ கூட்டரங்கில், கஸ்வா செயற்குழு உறுப்பினர் செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், இக்ராஃவின் முழு ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சியை நடத்துவதென்றும், நகரின் அனைத்துப் பள்ளிகளைச் சார்ந்த 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியரையும், பட்டப்படிப்பு முடித்தவர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதோடு, சிறப்பு விருந்தினர் குறித்தும் இறுதி முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் இறுதியில், சிவில் சர்வீஸ் படிப்பு பயில ஆர்வமுள்ள பத்து மாணவர்களை நேர்காணல் செய்து, அவர்களில் இருவரைத் தேர்வு செய்து, அவர்களது படிப்பிற்கான முழுச் செலவையும் கஸ்வா பொறுப்பேற்கும் என்றும், இதுகுறித்த முழுத்தகவல்கள் பொதுமக்களுக்கு பிரசுரமாக வெளியிடுவதென்றும், முகாம் நிறைவுக்குப் பின் சிறப்பு விருந்தினரிடம் சிவில் சர்வீஸ் படிப்புகள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறச் செய்வதென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், கஸ்வா உள்ளூர் பிரதிநிதி ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப், இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |