இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.
கண்காட்சி:
மாநாட்டின் இரண்டாம் நாளான 09.07.2011 அன்று காலை 09.30 மணிக்கு, இஸ்லாமிய கலாச்சார, தமிழ் இலக்கிய கண்காட்சி துவக்க விழா, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த என்.டி.அப்துல் ஹை ஆலிம் நுழைவு வாயில், எம்.கே.எஸ்.முஹ்யித்தீன் இப்றாஹீம் ஸாஹிப் பி.ஏ. காக்கா அரங்கில் நடைபெற்றது.
மாநாட்டு கண்காட்சிக் குழு தலைவர் ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ, ஹாஜி எம்.எல்.ஷேக்னாலெப்பை, ஜே.ஏ.எஸ்.எம்.ஜலீல், ஹாஜி எம்.ஏ.எம்.சதக்கத்துல்லாஹ், ஹாஜி எம்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி கே.முத்துவாப்பா, எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி அரங்கைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ வரவேற்புரையாற்றினார். ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ் தலைமையுரையாற்றினார்.
அந்நேரத்தில் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மாணவர் மன்றத்தினர் தஃப்ஸ் முழங்க நகர்வலமாக கண்காட்சி துவக்க விழா அரங்கை வந்தடைந்தனர். பின்னர் அவர்களின் பைத் நிகழ்ச்சி மேடையில் நடைபெற்றது.
பின்னர், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் ஹாஜி எம்.இசட்.அஹ்மத் முனவ்வர் கண்காட்சியைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ சிறப்புரையாற்ற, கீழக்கரை டவுண் காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஷ் ஹுஸைன் சித்தீக்கீ கண்காட்சி குறித்து விளக்கவுரையாற்றினார். ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டவர்களுக்கு, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் சால்வை அணிவித்தார்.
பின்னர் நடைபெற்ற கண்காட்சியில், நாகர்கோவில் அப்துல் அஜீஸ் சேகரித்துள்ள திருக்குர்ஆன் தபால் தலை, தமிழக பள்ளிவாசல்களின் படங்கள், கீழக்கரை டவுண் காஜி பாதுகாத்து வரும் - முகலாயப் பேரரசர் அவுரங்கசேப் பாதுஷா தன் கைப்பட எழுதிய திருக்குர்ஆன், கோட்டாறு மை.முஹம்மத் அலீ சேகரிப்பில் பழம்பொருள் ஆவணங்கள், காயல்பட்டினம் பொதுமக்களின் பல்வேறு அரிய காட்சிப் பொருட்கள், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியரால் சேகரிக்கப்பட்ட அரிய பழம்பொருட்கள், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியரின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு சரித்திரப் புகழ்வாய்ந்த கட்டிடங்களின் மாதிரிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
அவற்றை, மாநாட்டிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட வெளியூர் உள்ளூர் பொதுமக்கள் ஆவலுடன் கண்டு மகிழ்ந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளனைத்தையும் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார். |