இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.
ஆய்வரங்கம்:
மாநாட்டின் இரண்டாம் நாளான 09.07.2011 அன்று காலையில், ஆய்வரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் இவ்வரங்கைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா சமய நல்லிணக்க நாடாகும். விடுதலை போராட்ட காலத்தில் மதமோதல் ஏற்பட்டதால் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது நேரு நேரில் வந்து உண்ணாவிரதத்தை நிறுத்த கோரினார். பாகிஸ்தானில் இருந்து ஜின்னா தந்தி மூலம் உண்ணாவிரதத்தை நிறுத்த கேட்டு கொண்டார். இஸ்லாமிய நிகழ்ச்சியில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக கலந்து கொள்வதாக உறுதியளித்தால் தான் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக கூறினார். அதன்படி ஒற்றுமையாக நடந்த இஸ்லாமிய விழாவில் காந்தியடிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலந்து கொண்டார்.
நாட்டுப்புற இலக்கியத்தை பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். 2000 இலக்கியங்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை.
இங்கிலாந்திற்கு சென்றபோது லண்டன் மியூசியத்தில் உள்ள நூலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு இதுவரை வெளிவராத 170 தமிழ் ஏடுகள் இருப்பதை கண்டு வியந்தேன். மதுரையைத் சேர்ந்த மம்மூத் என்ற இஸ்லாமிய அறிஞர் ஜெர்மனியில் 40 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை நாம் பார்க்க வேண்டும். இதில் உள்ள தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இதுபோன்ற இலக்கிய மாநாட்டில் உள்ள இலக்கிய வாதிகள் முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். |