இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது. இறுதிநாள் நிறைவு விழாவின்போது 34 பேருக்கு ‘சேவைச் செம்மல்‘, ‘தமிழ் மாமணி‘ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. உரை:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் துவக்க நாளான 08.07.2011 அன்று மாலை 05.30 மணிக்கு, நடைபெற்ற துவக்க விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயிதெமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும், அப்போது முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புகளும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார். அவரது உரை முழு விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினத்தின் சிறப்பு:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டை காயல்பட்டினத்தில் நடத்துவது உண்மையில் மிகவும் பொருத்தமானதே. காயல்பட்டினத்தில் ஒரு நிகழ்ச்சி என்றால், என் மனதில் அது மகிழ்ச்சியைத் தந்துகொண்டே இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்று எனக்கே தெரியவில்லை.
இந்த மண்ணில் பிறந்த மக்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். இங்கு மார்க்கத்தைக் கற்றுத் தேர்ந்த ஆலிம்களுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு வீட்டிலும் திருமறை குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ்கள் இருக்கின்றனர். இதை விட இந்த ஊருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?
காயல்பட்டினத்தில் மாநாடு நடத்துவது மிகவும் பொருத்தம்:
உலகில் பல பகுதிகளிலிருந்து இஸ்லாமிய செய்திகளைக் கொண்டு செல்வதற்காக வந்த பயணக்குழுவினர் இந்த மண்ணில் வந்திறங்கியதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் நிறைய உள்ளன. காயல்பட்டினத்தின் பெருமையைப் பற்றி நான் இங்கு மட்டும் சொல்லவில்லை. எங்கெங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் தேவை வரும்போது இதைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் காயல்பட்டினத்தை ஆய்வு செய்தாலே பல அரிய தகவல்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
மத்திய நிதியமைச்சகத்தின் உலக வங்கி ஒருங்கிணைப்பாளராக இன்று பணி செய்பவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சார்ந்த வேணு ராஜாமணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் இந்திய தூதராகப் பணியாற்றியபோது, இந்தியாவிற்கும், அரேபியாவிற்கும் இடையிலான கலாச்சாரத் தொடர்பைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டுமென ஆவலுற்று, அதற்கான முயற்சியில் இறங்கினார்.
அதற்கான தகவல்களை அவர் திரட்டத் துவங்கிய நேரத்தில், அரேபியர்கள் அதிகம் வந்தடைந்த இடம் தென்னிந்தியாதான் என்ற உண்மையை அறிந்தவராக, அது தொடர்பான செய்திகளை அவர் திரட்ட முற்பட்டபோது, காயல்பட்டினத்திற்கு வந்தால் இதுபற்றிய முழுமையான செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம் என்று அவருக்கு சொல்லப்பட்டு, அவர் அந்த முயற்சியில் இறங்கினார்.
அவர் ஆய்வு செய்து வெளியிட்ட ஆங்கில நூலில், அரேபியர்கள் அதிகம் வந்தது காயல்பட்டினத்திற்கே... அங்கிருந்துதான் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருக்கின்றனர்... காயல்பட்டினத்திற்கு வந்ததற்குப் பிறகுதான் கேரளாவிற்கு அரபியர்கள் வந்துள்ளனர் என்கின்ற தகவல்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறார்.
அந்தளவிற்கு அரபு கலாச்சாரத்தின் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்த காயல்பட்டினம் வரலாற்று ரீதியாக ஒரு பெருமைமிக்க நகர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆகவே, இந்த மாநாட்டை இங்கு நடத்துவது மிகவும் பொருத்தமானது.
தமிழுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த காயிதெமில்லத்:
இஸ்லாமிய இனிய நற்செய்திகளை தமிழுடன் குழைத்தளித்த புலவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு உயிரோட்டமளிப்பதே இதுபோன்ற மாநாடுகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
ஒரு மொழிக்கு இலக்கிய வளம், இலக்கண நயம் இரண்டும் இருக்க வேண்டும். அவை இன்னொரு மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டதாக இருக்கக் கூடாது. அந்த மொழி ஆண்டாண்டு கால பாரம்பரியப் பெருமை மிக்கதாக இருக்க வேண்டும். இவ்வாறிருந்தால் மட்டுமே அவை செம்மொழியாகக் கருதப்படும். அந்த வகையில் தமிழ் மொழி இந்த அனைத்து அம்சங்களையும் பொருந்தியதாக இருக்கிற காரணத்தால் அது செம்மொழி என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்படி அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழி எது என்கிற விவாதம் வந்தபோது, இலக்கிய நயமும், இலக்கண வளமும் மிக்க என் தாய்மொழியாகிய தமிழ்தான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமென வாதிட்டவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் என்பதை என்றைக்கும் நாம் பெருமிதத்தோடு பேசக்கூடியவர்கள்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய நூற்கள்:
கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த தமிழ் இலக்கியங்கள் குறித்து இன்று ஆய்வு செய்யப்படுகிறது. இந்த தமிழாய்வு நூற்களில் ஒரு நூல் கூட இஸ்லாமிய தமிழ் இலக்கிய நூல் இல்லையே...? அதற்கான காரணமென்ன? ஆய்வு செய்யுமளவுக்கு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு இஸ்லாமிய தமிழ் இலக்கிய படைப்புகள் ஒன்றுமே இல்லையா? இதுபற்றி ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது இந்த மாநாட்டின் கடமை என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
“இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி” என்று முழங்கினார் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள். அந்தளவிற்கு சன்மார்க்கத்தையும், இன்பத்தமிழையும் நேசிக்கக் கூடியவர்கள் முஸ்லிம்கள்.
இலக்கியத்தின் மூலக்கருவாக இருக்க வேண்டியவை:
வெறுமனே இஸ்லாம், முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டிருப்பதால் மட்டும் ஒருவன் உண்மை முஸ்லிமாகிவிட முடியாது. அல்லாஹ் தன் திருமறை குர்ஆனில் தெரிவித்திருப்பதைப் போல, “அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, நற்கருமங்கள் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று சொல்பவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்” என்ற வசனத்தை அடிப்படைக் கருவாகக் கொண்டு நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.
இலக்கியம் என்றால், காதல் கதை, காமக் கதை, ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இல்லாதவற்றையும், பொல்லாதவற்றையும் சொல்வது என்றில்லாமல், அதிலும் இறைப்பாதையில் அழைக்கும் அழைப்புப் பணியே அடிப்படைக் கருவாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் அந்த இலக்கியம் நன்மை தரும் செயலாகவே ஆகிவிடும். அந்த அடிப்படையில் தற்கால இலக்கியவாதிகள் தமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டுமென இந்த மாநாட்டின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இலக்கியத்தைப் பயன்படுத்தி மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பாகுபாடு காண்பிக்கக் கூடாது. காரணம், மனிதனை மனிதனாகவே பார்க்கச் சொல்கிறது இஸ்லாம். இதற்கு மாற்றமாகச் செய்வது இஸ்லாமை நாம் மதிக்காததாகிவிடும்.
டிசம்பரில் சாதிவாரி கணக்கெடுப்பு:
இம்மாநாட்டின் வாயிலாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். சாதிவாரியாக கணக்கெடுக்கும் பணி வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் துவங்கவுள்ளது. இஸ்லாத்தில் ஜாதியில்லை. ஆனால் மத்திய – மாநில அரசுகள் முஸ்லிம்களை சாதிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளனர்.
தமிழக அரசு லெப்பை, தக்னி, மாப்பிள்ளா, தூதேகுலா, செய்யது, ஷேக், அன்ஸார் ஆகிய ஏழு சாதிப்பிரிவுகளாக நம்மை வகைப்படுத்தியுள்ளது.
மத்திய அரசு லெப்பை, தக்னி, மாப்பிள்ளா, தூதேகுலா ஆகிய நான்கு பிரிவுகளை மட்டுமே பிற்பட்டோர் பட்டியலில் வைத்துள்ளது. இதைப் புரிந்துகொள்ளாத நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், பாரம்பரியப் பெருமையின் அடிப்படையில் ராவுத்தர் என்றும், மரைக்காயர் என்றும் சாதிக்கணக்கெடுப்பின்போது பதிவு செய்தால், அவர்கள் பிற்பட்டோர் பட்டியலில் அனுபவிக்க வேண்டிய சலுகைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்பில் அரசு அங்கீகரித்துள்ள சாதிப்பெயரையே குறிப்பிட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். முஸ்லிம்கள் அனைவரையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்குண்டான முயற்சிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈடுபட்டுள்ளது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம் சமுதாயம் விழிப்போடு செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு மஹல்லாவிலும், பள்ளிவாசல்களிலும், வீடுகள்தோறும் எடுத்துச் சொல்ல வேண்டியது சமுதாயத்தின் அனைத்து அமைப்புகளின் கடமையாகும். இதில் நாம் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது.
இவ்வாறு, எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார். |