இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது. இறுதிநாள் நிறைவு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் காதர் மொகிதீன், காயல்பட்டினத்தை ஆய்விடமாகக் கொண்டு வரலாற்று ஆய்வாளர்கள் தமது ஆய்வுப் பணியை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நிறைவு விழா:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மூன்றாம் நாளான 10.07.2011 அன்று மாலை 05.30 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலில், அல்லாமா ஹபீப் முஹம்மத் லெப்பை ஆலிம் அரங்கத்தில் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது.
பேரா. காதர் மொகிதீன் உரை:
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இவ்விழாவில், மாநாட்டின் மூன்று நாள் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தி உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் காயல்பட்டினம்:
காயல்பட்டணத்தில் 3 நாட்கள் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பல உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளது. தமிழகம் மட்டும் அல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தமிழறிஞர்கள் இம்மாநாட்டில் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தில் சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள், கவிஞர்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களின் சிறப்புகளை வெளிக்கொண்டு வரவேண்டும். காயல்பட்டணம் வரலாறு மிகவும் தொன்மையானது. மிகவும் பழமையானது.
காயல்பட்டினத்தின் வரலாறு மிகவும் தொன்மையானது. பழமையான மத்திய ஆசிய நாடுகளும், மத்திய தரைக் கடல் நாடுகளும் தமிழகத்தில் முதன் முதலாக கடல் வழியாகத் தொடர்புகொண்ட இடம் காயல்பட்டினம்.
காயல்பட்டினத்தைக் களமாகக் கொண்டு ஆய்வுப்பணி:
சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் அருகில் உள்ள கொற்கைத் துறைமுகம் கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியது. இது விரிவடைந்து காயல்பட்டினம் உள்ளிட்ட 18 துறைமுகங்கள் உருவாயின. காயல்பட்டினத்தைக் களமாகக் கொண்டு இஸ்லாமிய வரலாற்றை ஆய்வாளர்கள், ஆய்வுப் படிப்பிலிருக்கும் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுப் படிப்பில் உள்ளவர்கள், The role of Kayalpatnam in the history of Muslims of South India என்ற தலைப்பிலேயே ஆய்வு செய்தால் அது மிகவும் பொருத்தமாக அமையும் என்று கருதுகிறேன்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு தனிப்பாடம்:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஞானம் மாணவ, மாணவிகளைச் சென்றடையும் வகையில், கல்லூரிகளில் தமிழ், ஆங்கில இலக்கியத்திற்கு தனிப்பாடம் இருப்பது போன்று இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கும் பாடத்தொகுப்பு உருவாக்கப்பட வேண்டும். கல்லூரிகளிலும், தன்னாட்சி கல்லூரிகளிலும் இந்த அடிப்படையில் இளங்கலை, முதுகலை பட்டம் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொய்யான பரப்புரைகள்:
இந்தியாவில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர். அவர்களை இழிவுபடுத்த பொய்யான பல பரப்புரைகள் நாடு முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் அவ்வாறிருக்குமானால், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் எந்த ஓரிடத்திலாவது தீவிரவாதத்தைப் பற்றி ஒரு வரியேனும் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
எனவே, இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தைப் பரப்புவதன் மூலம் தீவிரவாதம் குறித்த அவப்பெயரை காலப்போக்கில் நீக்க நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார். |