இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது. 10.07.2011 அன்று மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவின்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை பாட நூல்களில் விரிவாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் இத்தீர்மானங்கள் மூலம் தமிழக அரசுக்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீர்மானங்களை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொருளாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வாசிக்க, தக்பீர் முழக்கத்துடன் விழாவில் கலந்துகொண்டோர் அவற்றை ஒருமனதாக வழிமொழிந்தனர். தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் 01 - இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்திற்கு நன்றி:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட்டினத்தில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக நிர்வாகிகளுக்கு இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 02 – அனைத்து காயலர்களுக்கும் நன்றி:
2011 ஜூலை 08, 09, 10 மூன்று நாட்கள் காயல்பட்டினத்தில் இம்மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற அனைத்து வகையான ஒத்துழைப்புக்களையும் வழங்கிய காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத், சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இம்மாநாட்டு குழுக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.
தீர்மானம் 03 - நகர நிறுவனங்களுக்கு நன்றி:
மாநாட்டின் பேராளர்களாக வெளிநாடுகளிலிருந்து பங்கேற்றவர்களுக்கு தங்குவதற்கு இடமளித்து உதவியவர்கள், உபசரித்தவர்களுக்கும்,
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்தவர்களுக்குத் தங்குவதற்கு இடமும் உபசரிப்பும் வழங்கிய மற்றும் மாநாட்டுப் பந்தலுக்கும் தங்கியிருக்கும் இடங்களுக்கும் வந்து செல்ல வாகனங்களையும் தந்துதவிய வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிர்வாகத்திற்கும்,
ஆய்வரங்கம் நடத்த இடமளித்துதவிய எல்.கே.மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும்,
மகளிர் அரங்கம் நடத்த இடமளித்துதவிய ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் நிர்வாகத்திற்கும்,
மூன்று நாள் பொது நிகழ்ச்சிகளையும் நடத்த இடமளித்துதவிய ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்திற்கும்,
இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த - ஒத்துழைத்த ஒவ்வொருவருவருக்கும் ஆயிரமாயிரம் முறை நன்றி சமர்ப்பிக்கின்றோம்.
தீர்மானம் 04 - பண்டைப் பொருட்களைப் பாதுகாக்க அருங்காட்சியகம்:
தமிழகத்தின் இஸ்லாமிய நுழைவாயிலாகப் போற்றப்படும் வரலாற்றுப் பெருமையைப் பேணிப் பாதுகாக்க ஆய்வுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதோடு, புதைந்து கிடக்கும் கல்வெட்டுகள், பண்டைய கலை பொக்கிஷங்கள், அரபுத்தமிழ் கிதாபுகள், நூல்கள் அனைத்தையும் மீட்டுப் பாதுகாக்க "அருங்காட்சி பாதுகாப்பகம்" ஒன்றை இந்நகரில் நிறுவுவதென இம்மாநாடு முடிவு செய்வதோடு, அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து ஜமாஅத்தினரையும், பொதுமக்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 05 – புலவர்களின் ஆக்கங்களை நூல் வடிவில் கொணர்தல்:
நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பெற்றுத்தந்த காயல்பட்டினத்தில், அப்புலவர்களின் ஆக்கங்களை நூல்களாக அச்சிட்டு வெளியிடவும், அவற்றிலிருந்து ஆய்வுக் கட்டுரைகளும், ஆய்வு சொற்பொழிவுகளும் நடத்தப்படவும், பரிசளிக்கவும் அறக்கட்டளை நிறுவவும் இம்மாநாடு முடிவு செய்கிறது.
தீர்மானம் 06 - தமிழ் பாடநூற்களில் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள்:
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத் தமிழ்ப் பாடநூல்களில் விரிவாக இடம்பெறச் செய்ய தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 07 - இஸ்லாமிய ஆய்வு இருக்கை:
சென்னை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய ஆய்வு இருக்கைகள் அமைக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 08 – நலிவுற்ற எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை:
நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசின் சார்பில் உதவித்தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 09 - வெளிநாட்டுத் தமிழ் நூற்களை தமிழகத்தில் வெளியிடல்:
தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படும் நூல்கள் வெளிநாடுகளில் வெளியிடப்படுவது போல, இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியிடப்படும் இஸ்லாமிய தமிழ் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளியிட பதிப்பாளர்களை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.
தீர்மானம் 10 - சமூக நல்லிணக்கம் வளர்த்தல்:
நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் இலக்கிய நிகழ்ச்சிகளையும், ஈகைத் திருநாள் சகோதரத்துவ சந்திப்புக்களையும் நடத்த அனைவரையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.
தீர்மானம் 11 – தனிநபர் தவறுகளுக்கு மதச்சாயம் பூச இடமளிக்காதிருத்தல்:
சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் தனி நபர் தகராறுகளுக்கு சமுதாய, மதசாயம் பூச முற்பட்டால் அதற்கு யாரும் இடமளிக்காமல் அமைதியை நிலைநாட்ட துணை நிற்க அனைவரையும் இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.
அதே சமயம் பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் யார் எனக் கண்டறிந்து அப்படிப்பட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும்படியும், ஒருபோதும் நிரபராதிகளை துன்புறுத்தக் கூடாது எனவும் காவல்துறையை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 12 - காயல்பட்டினம் கூட்டுக் குடிநீர் திட்டம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டிக்கு அடுத்த ஒரே நகராட்சியான காயல்பட்டினத்தில் 45000 மக்கள் வாழ்கின்றனர். காயல்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டமும், குடிநீர் அபிவிருத்தி திட்டமும் இந்நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவில்லை என்பதால் இந்நகருக்காக தனியாக குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது.
பொன்னன்குறிச்சியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தனிகுழாய் மூலம் காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் குடிநீர் திட்டத்திற்கு ரூ.33 கோடியில் திட்டமிடப்பட்டு, கடந்த ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது.
அந்த குடிநீர் திட்டத்திற்கு இந்ந நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி, நடப்பு ஆண்டில் இதனை நிறைவேற்றித்தர தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 13 - இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தல்:
கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதனை 5 சதவீதமாக உயர்த்தித் தர வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 14 - தூடி. - கொழும்பு கப்பல் சேவை தொய்வின்றி தொடர வேண்டும்:
தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பல் சேவை தொடங்கப்பட வேண்டுமென்பது நீண்டகால கோரிக்கையாகும். அச்சேவை அண்மையில் துவக்கப்பட்டதும் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கப்பல் சேவையை நிறுத்த வேண்டுமென தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு இடையூறு இல்லாத வகையில் தொடர்ந்து இந்த கப்பல் சேவையை தொடரச் செய்ய வேண்டுமென மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 15 - இலங்கை வானொலி முஸ்லிம் சேவை:
இலங்கை வானொலியின் தமிழ் சேவை தமிழக மக்களை பெருமளவில் மகிழ்வித்து வந்தது. இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் தடைபட்ட அச்சேவை தற்போது துளிர்விட்டுள்ளது. அது 100 விழுக்காடு பூரணத்துவம் பெற்று மிளர வேண்டும். ரமலான் நோன்பு, சஹர் நேர நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இஸ்லாமிய சேவையும் விரைவில் தொடங்கப்பட வேண்டுமென இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 16 - முஸ்லிம் தமிழறிஞர்களின் நூற்களை நாட்டுடமையாக்கல்:
இலக்கியப் பேரறிஞர் தாவூத்ஷா, தமிழக அரசின் சிறந்த கவிஞருக்கான விருதை இருமுறை பெற்ற தனித்தமிழ்த் தென்றல் காரை இறையடியான், இறையருட்கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர், வரலாற்றுப் புதின ஆசிரியர் செய்யது முஹம்மது ஹஸன் ஆகியோரின் நூற்களை நாட்டுடைமையாக்கி, அவர்களது குடும்பங்களுக்கு போதிய ஈவுத்தொகை வழங்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 17 - பல்கலைக் கழகங்களுக்கு காயிதெமில்லத், உமறுப்புலவர் பெயர்:
தமிழகத்தில் இனி அமையவிருக்கும் பல்கலைக்கழகங்கள் இரண்டிற்கு தேசிய தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயரையும், இஸ்லாமியப் பெரும் புலவர் உமறுப்புலவர் பெயரையும் சூட்ட வேண்டும் என்று இம்மாநாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 18 - சிவில் சர்வீஸ் படிக்கும் முஸ்லிம்களுக்கு உதவ கோரிக்கை:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் படிப்புகளைப் படிக்க இளைய முஸ்லிம் சமுதாயத்தை ஊக்குவிக்கவும், அவர்கள் பயிற்சி பெறுவதற்கு நிதியுதவி அளிக்கவும் சமுதாயப் புரவலர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 19 - கலைச்சொல் அகராதி:
அரபுச் சொல் உச்சரிப்புக்களுக்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய கலைச்சொல் அகராதியை வெளியிட வேண்டுமென அறிஞர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 20 - பாடநூலில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதை:
தமிழ்நாடு அரசு பாடநூலிலிருந்து உலகம் போற்றும் தமிழறிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதை நீக்கப்பட்டதை அறிந்து இம்மாநாடு வேதனை அடைகிறது. மீண்டும் அக்கவிதையை இடம்பெறச் செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 21 - இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்திற்கு நன்றி:
பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்களுக்கு இன் றைய கால சூழ்நிலைக் கேற்ப ஊதியம் வழங்குமாறும், புனித ரமலான் மாதத்தில் அவர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்திக்கொடுக்கு மாறும் சமுதாயத்தை இம்மாநாடு மிகுந்த பணிவன்போடு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. |