செய்தி எண் (ID #) 6746 | | |
திங்கள், ஜுலை 18, 2011 |
ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5568 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய |
|
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு காயல்பட்டினத்தில் நடத்தப்பட்டது.
10.07.2011 அன்று நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவுவிழாவின்போது, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கும், இன்னும் பலருக்கும் அவர்களின் சமுதயாச் சேவையைப் பாராட்டி ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கப்பட்டது.
தங்கள் மத்ரஸா முதல்வருக்கு இந்த விருதை வழங்கியமைக்காக, மத்ரஸா நிர்வாகம் சார்பில் மாநாட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜும்ஆவின்போது பொதுமக்கள் பார்வைக்காக பிரசுரமும் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-
இந்நகரில் சன்மார்க்கப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள் ஒருவரும், எமது மதிப்பிற்குரிய வழிகாட்டியுமான காயல்பட்டினம் அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கு, சரித்திரப் புகழ்மிக்க இக்காயல்பதியில் 10.07.2011 அன்று நடத்தப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டில், சேவைச் செம்மல் விருது வழங்கி கவுரவித்த மாநாட்டுக் குழுவினர் அனைவருக்கும் எமது அகங்கனிந்த நன்றிகள உளப்பூர்வமாக தெரிவித்து மகிழ்கிறோம். இம்மாநாட்டின் விளவாக, இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மேலும் தழைத்தோங்கவும், அதன்மூலம் இஸ்லாம் உலகத் தமிழ் சமுதாயத்திற்கு முழுமையாகச் சென்று சேரவும் எல்லாம்வல்ல அல்லாஹ்வை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறோம். மாநாட்டில் வழங்கப்பட்ட பாராட்டுக் குறிப்புரை வருமாறு:-
இந்நகரின் தலைசிறந்த மார்க்க மாமேதையாய்த் திகழ்ந்த மர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மது இஸ்மாயீல் ஆலிம் முஃப்தீ அவர்களின் சகோதரர், காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் நஹ்வீ இஸ்ஹாக் லெப்பை ஆலிம் – அல்ஹாஜ்ஜா ஃபாத்திமா பீவி தம்பதியின் இரண்டாவது மகனாக 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் தேதி பிறந்தவர் அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்கள்.
இவர், மார்க்க அறிஞர் மவ்லவீ அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆலிம் ஃபாஸீ அவர்களின் இளைய சகோதரர்.
பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி விடுமுறை காலங்களில் மார்க்க அடிப்படைக் கல்வியைப் புகட்டும் நோக்குடன் 1971ஆம் ஆண்டு, காயல்பட்டினத்தில் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் துவக்கப்படவும், அதன்மூலம் இந்நகரின் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மார்க்கப் பற்றுடன் திகழவும் துவக்கக் காரணியாகத் திகழ்பவர்...
அதே மத்ரஸாவின் ஒரு பிரிவாக 1985ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மனனப் பிரிவு – ஹிஃப்ழு மத்ரஸா துவக்கப்படவும், அதன்மூலம் இன்றளவும் 211 மாணவர்கள் ஹாஃபிழ்களாக உருவாகவும் காரணமானவர்...
மருத்துவர், பொறியாளர், இன்னபிற பட்டப்படிப்புகளைக் கற்றவர்களாக ஹாஃபிழ் மாணவர்களை மத்ரஸா துவக்கம் தொட்டு இன்றளவும் திகழச் செய்து வருபவர்... இனியும் செய்யவிருப்பவர்...
பொருளீட்ட வெளிநாடுகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் வளமான வாய்ப்புகள் பல வந்தபோதிலும், தன்னலம் மறந்து பொதுநலம் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு, அல்லாஹ்வின் – அவனது திருத்தூதரின் திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்தவராய், தனது 20ஆம் வயது முதல் தியாகம் செய்து வருபவர்...
40 ஆண்டுகால இவரது மார்க்கச் சேவைக்கு ஊதியமாக சிறு தொகையைக் கூட இன்றளவும் தனக்குக் கொள்ளாதவர்...
இஸ்லாமிய மார்க்கக் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டு மேளதாளங்களுடன் திருமணம் உள்ளிட்ட விசேஷச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட அக்கால நடைமுறையை மாற்றி, ஆர்வமூட்டும் அரபி பைத்துகள் முழங்க அந்நிகழ்ச்சிகள் இன்றளவும் நடத்தப்படவும், இந்நடைமுறை இன்று தமிழகமெங்கும் பரவிடவும் முதல் காரணி இவர்...
1989ஆம் ஆண்டு புனித மக்காவில் சஊதி அரசாங்கம் நடத்திய சர்வதேச திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனனப்) போட்டிக்கு, ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் இரு மாணவர்களுடன் இந்திய பிரதிநிதியாகச் சென்று, புனித கஃபாவின் உட்பகுதியை தரிசிக்கும் அரிய வாய்ப்பையும் பெற்றவர் இவர்...
உலகின் பல நாடுகளிலுள்ள தலைசிறந்த நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை அலங்கரிக்கும் எண்ணிலடங்கா ஹாஃபிழ் பட்டதாரிகளும், சிறந்த தமிழ் நடையில் உரைகளாற்றி தமிழ் முஸ்லிம்களிடையே நீங்கா இடம் பெற்ற மார்க்க அறிஞர்களும், இவரது மகத்தான மார்க்க சேவைக்கு நடமாடும் சாட்சிகள்!
இவ்வாறு அந்த பாராட்டுக் குறிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சேவைச் செம்மல்‘ விருது பெற்ற ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வரைப் பாராட்டி, அந்த மத்ரஸாவின் முன்னாள் மாணவர்கள் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஹாமிதிய்யா பொறுப்பாளர் ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ மற்றும் பாராட்டு விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். |