"ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும். வரும் 22ஆம் தேதிக்குள், மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை தள்ளிவைக்க வகை செய்யும், சட்டத் திருத்தத்தையும் ஐகோர்ட் ரத்து செய்தது.
ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு கடந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் வகையில், சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்', தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழக அரசு தலைமைச் செயலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்து, கடந்த 5ஆம் தேதி, ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தது.
இதையடுத்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' முன் விசாரணை நடந்தது. தமிழக அரசு சார்பில் டில்லி சீனியர் வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார், மனுதாரர்கள் தரப்பில் சீனியர் வழக்கறிஞர் விடுதலை, வழக்கறிஞர்கள் வி.செல்வராஜ், எஸ்.பிரபாகரன், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடினர்.
இவ்வழக்கில், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
சமச்சீர் பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை இந்த ஆண்டில் கைவிட வேண்டும் என, குழு உறுப்பினர்களிடம் ஒருமனதான கருத்து இல்லை. சில மாற்றங்கள், இணைப்புகளை ஒவ்வொரு உறுப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதே கருத்தை, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர். இதுதான் நிலை என்றால், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் அரசு முடிவு, பின்னோக்கி அடியெடுத்து வைப்பது என்பதில் சந்தேகமில்லை; இதை நாங்கள் அனுமதிக்க முடியாது.
ஏற்கனவே, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் பழைய நிலைக்கு செல்வது என்பது, ஐகோர்ட் உத்தரவை மீறுவது மட்டுமல்லாமல், சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்தது போலாகி விடும். அரசின் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்களின் நலன்களுக்கு ஆபத்தாகி விடும். தமிழக அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள சம உரிமையை மீறுவதாக உள்ளது. இது ரத்து செய்யப்படுகிறது. வகுப்புகளை ஆசிரியர்கள் துவங்க ஏதுவாக, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க வேண்டும். வரும் 22ஆம் தேதிக்குள் வினியோகித்து முடிக்க வேண்டும்.
மூன்று மாதங்கள்: குழு உறுப்பினர்கள் அளித்த பரிந்துரைகளின்படி, பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களை ஆய்வு செய்யலாம். ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு, சேர்க்க வேண்டிய பகுதிகளைச் சேர்த்து, அவற்றை கூடுதல் தொகுப்பாக மூன்று மாதங்களுக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பாடப் புத்தகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை அரசு தெரிவிக்க வேண்டும்.
இன்றைய மாணவர்கள் தான், நமது நாட்டின் நாளைய எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாநில அரசு முயற்சிகளை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை தலைமை நீதிபதி வாசித்து முடித்த உடன், "ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளோம்' என அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறினார். ஆனால், அவர் கேட்ட கால அவகாசத்தை முதல் பெஞ்ச் ஏற்கவில்லை. தங்களுக்கு உத்தரவின் நகல் உடனடியாக வழங்க வேண்டும் என, அட்வகேட் ஜெனரல் கோரினார். உத்தரவு நகல் வழங்க, தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்பீல் செய்வதற்காக நேற்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், டில்லி புறப்பட்டு சென்றார். தற்போது சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள், மாவட்ட தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, மேல் முறையீடு செய்தால், அதன் மீது உத்தரவு வர சில நாட்கள் ஆகும். அதுவரை பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.
மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்குமா?
சமச்சீர் கல்வி வழக்கில், நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. 22ஆம் தேதிக்குள், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி, வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி, மாணவர்களுக்கு இன்று முதல், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் 22ஆம் தேதிக்குள், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தான், ஐகோர்ட் கூறியுள்ளது. 19ஆம் தேதியில் இருந்து வழங்க வேண்டும் என கூறவில்லை. எனவே, 22ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மேல் முறையீடு செய்ய உள்ளது. கடந்த முறை, விரைவாக தீர்ப்பு பெற்றதுபோல், இந்த முறையும் தமிழக அரசின் அப்பீல் மனுவை, அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வலியுறுத்தப்படும்.
நாளையே (இன்று) அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட அரசு திட்டமிட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு வினியோகம் செய்ய ஒரு நாள் போதும். அதனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை, எந்தவித நடவடிக்கையும் இருக்காது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், 22ஆம் தேதி வரை மாணவர்களுக்கு புத்தக வினியோகம் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை.
கல்வி அமைச்சர் டில்லி பயணம்:
சமச்சீர் கல்வி குறித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து மேல் முறையீடு செய்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றனர். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஷபீதா, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு 9.10 மணிக்கு சென்னையில் இருந்து டில்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டில்லி புறப்பட்டனர்.
நன்றி:
தினமலர் (18.07.2011) |