தமிழகத்தில் சுமார் 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும் சூழலில், மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் அடைகின்றனர். ஜூலை 8 அன்று சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் கலந்தாய்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடைய திருச்சி மாவட்டத்தில் உள்ள மணச்சநல்லூர் கிராமத்தில் என்.ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் - தான் இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதியிருந்ததாகவும், பொறியியல் கல்லூரியில் சேர கலந்தாய்வுக்காக காத்திருப்பதாகவும், ஆனால் 500 கல்லூரிகளுக்கு மேல் இருக்கும் சூழலில் தான் எவ்வாறு நல்ல கல்லூரியை தேர்வு செய்வது என்பதில் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் இக்கல்லூரிகளை கண்காணிக்கும் அண்ணா பல்கலைகழகம் - அவைகளை, தேர்வு முடிவுகள் அடிப்படையில் தரவரிசை படுத்தும்படி உத்தரவிடும்படி கேட்டிருந்தார்.
அவரின் வழக்கறிஞர் கூறுகையில் கல்லூரிகளை அவைகள் வழங்கும் வசதிகள் கொண்டு தரவரிசை படுத்துவது சிரமம் என்றாலும், தேர்வு முடிவுகள் அடிப்படையில் தரவரிசை படுத்தலாம் என்றும் கூறினார்.
அவ்வழக்கை விசாரித்த நீதிபதி என். பால் வசந்த குமார் நேற்று வழங்கிய தீர்ப்பில், அண்ணா பல்கலைக்கழகத்திடம் அனைத்து கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இருப்பதால் அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரித்து, ஒரு வாரத்திற்குள் வெளியிடும்படி உத்தரவிட்டார்.
2006 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியிலை - தேர்வு முடிவுகள் அடிப்படையில் - வெளியிட்டது. புதிதாக துவக்கப்பட்ட கல்லூரிகளின் எதிர்ப்பினை தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் அத்திட்டம் கைவிடப்பட்டது.
தகவல்:
தி ஹிந்து |