வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது, நகர பொதுக்களுக்கு அனைத்து வழிகாட்டுதல்களையும் செய்வதென “காக்கும் கரங்கள்” நற்பணி மன்றம் முடிவு செய்துள்ளது.
பொதுநல அமைப்புகளின் நகர்நலப் பணிகளுக்கு களமிறங்கிப் பணியாற்றல் உள்ளிட்ட முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு “காக்கும் கரங்கள்” நற்பணி மன்றம்.
இந்த அமைப்பின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் 17.07.2011 அன்று இரவு 08.00 மணிக்கு ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள அமைப்பின் அலுவலகத்தில், அதன் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் குழு தலைவர்களுள் ஒருவருமான காயல் மகபூப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அமைப்பின் அங்கத்தினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
துவக்கமாக, இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டில் ஆர்வத்துடன் களப்பணியாற்றியமைக்காக அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அமைப்பை சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் அரசுப்பதிவு செய்வது,
முதியோர் இல்ல பராமரிப்புப் பணிகளுக்கான முயற்சிகளை மேற்கொள்வது,
இரத்த வங்கி ஒன்றை காயல்பட்டினத்தில் நிறுவ முயற்சிகள் மேற்கொள்வது,
வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜாதிவாரி கண்க்கெடுப்பின்போது, காயல்பட்டினம் நகர பொதுமக்கள் சரியான முறையில் தமது பெயர்களைப் பதிவு செய்வதற்காக அனைத்து தெருக்களுக்கும் அமைப்பின் உறுப்பினர்களை நியமித்து, பதிவு செய்ய வரும் அலுவலர்களோடு இணைந்து சென்று, பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைச் செய்வது
உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
நிறைவாக, ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் நன்றி கூற, துஆ ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. |