தூத்துக்குடியில் மாற்றுதிறனாளிகளுக்கு இலவசமாக வழங்க 20மோட்டார் சைக்கிள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் 5 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது. இதனால் இந்த மோட்டார் சைக்கிளை பெற விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இம் மாவட்டத்தில் மொத்தம் சுமார் 22 ஆயிரம் மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை பெறும் வகையில் தூத்தக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வாரத்திற்கு ஒரு நாள் முகாம் நடத்தப்பட்டு டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுதிறனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் முதியோர் உதவித் தொகை 3 ஆயிரத்து 825 பேருக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதியதாக விண்ணப்பம் செய்வோருக்கும் விசாரணை நடத்தப்பட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2, அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுதிறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக அரசு சார்பில் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படுகிறது.
இந்த வாகனத்தை பெறுவதற்கு இரண்டு கால் ஊனமாக இருக்க வேண்டும். இரண்டு கைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதற்கு வருமானச்சான்று எதுவும் தேவையில்லை. படிப்புச்சான்று, மாற்றுதிறனாளி அடையாள அட்டை ஜெராக்ஸ் நகல்களுடன் மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தால் போதும். விசாரணை செய்யப்பட்டு இந்த தகுதிகள் உள்ளோருக்கு உடனடியாக இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது மொத்தம் பேட்டரியில் இயங்கும் 20 மோட்டார் சைக்கிள் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்க இம்மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளது. ஆனால் 5 விண்ணப்பங்கள் மட்டுமே உள்ளன. இதனால் மாற்றுதிறனாளிகள் உடனடியாக இலவசமாக இந்த வாகனத்தை பெற விண்ணப்பம் செய்தால் போதும். உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று மாற்றுதிறனாளிகள் நல அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:
தினமலர் (22.07.2011) |