காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தின் வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம் 17-07-2011 ஞாயிற்றுக்கிழமை எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியரும், நூலகப் புரவலருமான ஜனாப் எஸ்.எப்.முகம்மது முகைதீன் சுலைமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நூலக தன்னார்வலர் ஜனாப் எம்.என்.ஷாநாவஸ் அவர்கள் கிராஅத் ஓதி ஆலோசனைக் கூட்டத்தை துவக்கி வைத்தார். வாசகர் வட்ட துணைத் தலைவரும், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியருமான ஜனாப் மு.அப்துல் ரசாக் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஜனாப் எம்.ஐ.முஹம்மது தீபி, ஜனாப் எம்.எஸ்.நெய்னா முஹம்மது மற்றும் திரு.ஏ.கருப்பசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர் நூலக தன்னார்வலர்கள் ஜனாப் எஸ்.எச்.அப்துல் அஜீஸ் மற்றும் டாக்டர் என்.அப்துல் ஹக் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
மகளிர் வாசகர்கள் சார்பாக வாசகர் வட்ட உறுப்பினர் திருமதி. பி.எம்.ஐ.ஆபிரத்துல் ஆபிதா, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி அரபித்துறை பேராசிரியை எஸ்.ஏ.கே.முத்து மொகுதூம் பாத்திமா ஆகியோர் உரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலகக் கட்டடம் விரிவாக்கம் குறித்தும், பெண்கள் பிரிவு நூலகம் அமைப்பது குறித்தும் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் மறைந்த நூலகப் புரவலர் பன்மொழிப் புலவர் திரு.கி.நாராயணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல், நூலகக் கட்டட விரிவாக்கம், பெண்கள் பிரிவு நூலகம், புதியதாக நூலகப் புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்கு பாராட்டு மற்றும் நூலக உறுப்பினர்கள், புரவலர்கள் அதிகமாக நூலகத்தில் சேர்த்தல் போன்ற ஆறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் அரசு நூலகர் அ.முஜீபு நன்றியுரையுடன் வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
|