காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) பிரிவு மாணவர்களுக்கு ஆண்டிறுதித் தேர்வு நிறைவுற்று, விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.
13.07.2011 அன்று தஜ்வீத் தேர்வும், 16.07.2011 அன்று ஹிஃப்ழு தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. ஹிஃப்ழு தேர்வு நிறைவுற்றதும், மாணவர்கள் ஒன்றுகூட்டப்பட்டு, எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.) தலைமையில் எளிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மத்ரஸாவின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, ஆசிரியர்கள் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மத்ரஸா முதல்வர் ‘சேவைச் செம்மல்‘ ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
பின்னர், சிறந்த முறையில் மாணவர்களுக்கு திருக்குர்ஆன் மனனப் பயிற்சி வழங்கியமைக்காக ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஆண்டிறுதித் தேர்வு நிறைவுற்றதைத் தொடர்ந்து, இம்மாதம் 23.07.2011 சனிக்கிழமை வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தகவல்:
ஹாஜி M.I.தமீமுல் அன்ஸாரீ, M.Com.,
கண்காணிப்பாளர்,
ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா,
காயல்பட்டினம். |