காயல்பட்டணத்தில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்ட சாலை போடும் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியரிடம் நேரில் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் வந்து மனு அளித்தனர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் நடந்தது. ஆட்சியர் விடுப்பில் உள்ளதால் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரனன், டி.ஆர்.ஓ அமிர்தஜோதி ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
அப்போது காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு மக்கள் சார்பில் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
காயல்பட்டணம் 2ம் நிலை நகராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 23 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணிகள் துவக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பணியினை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் பணிகள் இன்னும் முடியாமல் தேங்கிய நிலையில் உள்ளது. சதுக்கை தெரு முதல் வடக்கு முத்தாரம்மன் கோயில் வரை சிமென்ட் சாலை அமைக்கவே டெண்டர் எடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் பள்ளிகள், பள்ளிவாசல்கள், திருமணமண்டபங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் போன்றவை உள்ளன. பணிகள் கிடப்பில் கிடப்பதால் பள்ளி,மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து துரித நடவடிக்கை எடுத்து சாலைப் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:
தினமலர் (19.07.2011) |