பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு, அவர்களின் விடுமுறைக் காலமான ஞாயிற்றுக்கிழமையில் வாரந்தோறும் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியை போதிப்பதற்காக ஜாவியா அரபிக்கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் கல்விப் பிரிவு அல்மக்தபதுர் ராஸிய்யா.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் இப்பிரிவில், ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு பரிசளிப்பு விழா 15.07.2011 அன்று ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில், அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமையிலும், ஃகலீஃபத்துல் ஃகுலஃபா மவ்லவீ முத்துவாப்பா ஃபாஸீ முன்னிலையிலும் நடைபெற்றது.
இவ்விழாவில், நடப்பாண்டு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை ஜாவியா நிர்வாகிகளும், அபிமானிகளும் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, எட்டாண்டு பாடத்திட்டம் கொண்ட இக்கல்விப் பிரிவில் அனைத்து வருடங்களையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து கற்றுத் தேர்ந்த மூன்று மாணவர்களுக்கு ஸனது - பட்டம் வழங்கப்பட்டது.
நிறைவாக, ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது. அத்துடன், கல்லூரி பேராசிரியர்கள் அனைவருக்கும் விடுமுறை கால ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை மவ்லவீ ஹல்ஜீ ஃபாஸீ நெறிப்படுத்தினார். விழாவில் பொதுமக்களும், மத்ரஸா மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு ஜரூக்குல் ஃபாஸீ பெண்கள் தைக்காவில் இடவசதி செய்யப்பட்டிருந்தது.
|