சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழக குடோன்களில் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தை, இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
புத்தகம் இருப்பு:
ஜூலை 22க்குள், புத்தகங்களை பள்ளிகளில் வழங்க கோர்ட் உத்தரவிட்டது. அவற்றை வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே நேரம், மெட்ரிக் பள்ளிகளுக்கு தேவையான சமச்சீர் கல்வி புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழக குடோன்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களே வாங்கி தருவார்களா அல்லது பள்ளி நிர்வாகம் வாங்கி, மாணவர்களுக்கு வழங்க வேண்டுமா என்ற அறிவிப்பு இல்லாததால், மெட்ரிக் மாணவர்கள், புத்தகம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தவிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளே நேரடியாக குடோனில் பெறலாம். இதற்கான உத்தரவு இரண்டு நாட்களில் வரும். அதன் பின் புத்தகம் வழங்கப்படும்'' என்றார்.
நன்றி:
தினமலர் (19.07.2011) |