பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
சமச்சீர் கல்விக்கானப் புத்தகங்களை ஜூலை 22ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளது போல சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் தேவையான திருத்தங்கள், மாற்றங்களை அரசு செய்து கொள்ளலாம். 3 மாதத்துக்குள் அத்தகைய மாற்றங்களை செய்து, தேவைப்பட்டால் துணைப் பாட நூல்களைக் கூட மாணவர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி தொடர்பாக அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்த நீதிமன்றம், வரும் 22ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாட நூல்களை அங்கீகரித்துத் தமிழக அரசு அறிவிக்கை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக அதிமுக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு இத்தீர்ப்பை அளித்தது.
தீர்ப்பு விவரம்:
நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர் பாட நூல்களைப் பயன்படுத்த முடியுமா என்று ஆராயும்படி உச்ச நீதிமன்றம் கூறவில்லை. இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி ஆராயவே நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், சமச்சீர் கல்விப் பாட நூல்களை நடப்புக் கல்வியாண்டில் பயன்படுத்த முடியாது என்றும் அத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட எல்லா பாடப் புத்தகங்களையும் நீக்க வேண்டும் என்று நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் எதைச் செய்ய வேண்டும் என்று கூறியதோ அந்தப் பணியை இந்தக் குழு செய்யவில்லை என்பது தெரிகிறது.
சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களில் தேவையான மாற்றங்கள், திருத்தங்களை செய்ய வேண்டும் என்றுதான் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த எல்லா உறுப்பினர்களுமே கூறியுள்ளனர். என்.சி.இ.ஆர்.டி. சார்பில் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் கூட இவ்வாறு சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் பல நல்ல அம்சங்களையும் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆனால், சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்கள் முழுவதையும் இந்தக் கல்வியாண்டில் பயன்படுத்த முடியாது என்று நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அக்குழுவின் உறுப்பினர்கள் தனித்தனியாக தெரிவித்த கருத்துகளைப் பிரதிபலிப்பதாக இல்லை.
சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி (முந்தைய திமுக ஆட்சியில்) மிகவும் விரிவாக ஆராய்ந்த முத்துகுமரன் குழு 2006ஆம் ஆண்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் சமச்சீர் கல்விச் சட்டம் 2010 தமிழக அரசால் இயற்றப்பட்டது. இந்த சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தல் வெற்றியின் மூலம் தமிழகத்தில் கடந்த மே 16ஆம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மே 22ஆம் தேதி சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களோடு சமச்சீர் கல்வி பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்த அரசு, பழைய பாடத் திட்ட நூல்களை அச்சடிக்க மறுநாளே டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது.
நிபுணர் குழு பரிந்துரைகள் எதுவுமின்றி சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற தன்னிச்சையான முடிவுக்கு வந்த அரசு அதற்காக சட்ட திருத்தமும் செய்துள்ளது.
சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்கும் வகையிலான இந்த சட்ட திருத்தத்தால் மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்படும்.
இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தி சிறப்பான இலக்கை எட்டும் நோக்கில் அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் ஏ. நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியது:
சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பல புகார்கள் வந்தன. அந்தக் குறைகளை சரி செய்து தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் நிறுத்தி வைப்பது என்ற முடிவுக்கு அரசு வந்தது.
சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதை நிபுணர் குழுவும் உறுதி செய்துள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
இவ்வாறு நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
சமச்சீர் கல்வியில் இதுவரை....
கடந்த கல்வியாண்டில் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருந்தது. அதற்காக ரூ.200 கோடி செலவில் 6.33 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யத் தயார் நிலையில் இருந்தன.
சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன், சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு நிறுத்தி வைக்க முடிவு செய்து அதற்காக சட்டத்திருத்தம் திருத்தம் கொண்டு வந்தது. அந்தச் சட்டத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதுதொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் "1,6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும். பிற வகுப்புகளுக்கு இந்தக் கல்வி முறையை அமல்படுத்தும் வழிமுறைகளை ஆராய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
அக்குழு அறிக்கையின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையிலான நிபுணர் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதிடி.எஸ். சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு தனது தீர்ப்பைத் திங்கள்கிழமை வழங்கியது.
நன்றி:
தினமணி (19.07.2011) |