இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.
மலர் வெளியீடு:
மாநாட்டின் இரண்டாம் நாளான 09.07.2011 அன்று இரவு 07.30 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலில், ஹாஃபிழ் எம்.கே.செய்யித் அஹ்மத் அரங்கத்தில், மாநாட்டு ஆய்வுக் கோவை, இலக்கிய இணையம், “ஊடகம்” என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பு ஆகிய நூற்களும், மாநாட்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாநாட்டு ஆலோசனைக் குழு தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ், ஹாஜி கே.வி.முஹம்மத் ஃபாரூக், ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), ஹாஜி பிரபு முகைதீன் தம்பி, ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், ஹாஜி எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், எஸ்.எம்.செய்யித் காஸிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கமாக, காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை மாணவர்கள் இஸ்லாமிய பாடல் பாடினர்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகப் பொருளாளர் ஹ.மு.நத்தர்ஷா நூலை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவரும், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இவ்வரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்தூர் ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.
இலங்கை மக்களவை உறுப்பினர் அஸ்வர், சிங்கப்பூர் இலியாஸ், மலேசியா பிதாவுல்லா, இலங்கை காசிம் உமர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு, ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் சால்வை அணிவித்தார்.
தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் துறைத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் நன்றி கூற, மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
|