உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் - மக்காவில் உள்ள கஃபதுல்லாவை நோக்கி தங்கள் தொழுகை கடமையினை நிறைவேற்றுகின்றனர். இத்திசையினை துல்லியமாக அறிய பல நூற்றாண்டுகளாக, பல வழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Astrolabe என கூறப்படும் கருவிகள், காந்தக திசைக்காட்டி (Magnetic Compass) போன்றவை இதில் அடங்கும்.
சூரியனை கொண்டு கிப்லா திசையினை அறியும் வழியையும் பலர் - பல நூற்றாண்டுகளாக - தாங்கள் தொழவும், பள்ளிவாசல்களை கட்டவும் - பயன்படுத்தி வருவது உண்டு.
கிப்லா திசையினை அறிய சூரியனை பயன்படுத்த காரணம் - வருடம் இருமுறை, ஒரு குறிப்பிட்ட நாளின், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் - சூரியன் சரியாக கஃபதுல்லாவுக்கு மேல் (90 டிகிரி) வருவதாகும்.
இது ஒவ்வொரு ஆண்டும், மக்கா நேரப்படி மே 28 அன்று மதியம் 12:18 க்கும், ஜூலை 16 அன்று மதியம் 12:27 க்கும் நிகழ்கிறது. அந்நேரத்தில் உலகில் சூரியன் தென்படும் அனைத்து பகுதிகளிலும், சூரியன் - நேராக நிற்கும் பொருளின் மீது - ஏற்படுத்தும் நிழல் கிப்லாவினை நோக்கி இருக்கும்.
நாளை ஜூலை 16 - இந்திய நேரப்படி மதியம் 2:57 மணிக்கு, இந்நிகழ்வினை காணலாம். அதுபோல எங்கெல்லாம் - அதே நேரத்தில் - சூரியன் வானில் உள்ளதோ, அங்கெல்லாம் இம்முறை கொண்டு கிப்லா திசையினை அறியலாம்.
இந்நேரத்தில் உலகின் பாதி பகுதியில் சூரியன் மறைந்திருக்கும். அவ்விடங்களுக்கு பொருத்தமாக மேலும் இரு தினங்கள் உள்ளன. அது நவம்பர் 28 - இரவு 9:09 இங்கிலாந்து நேரம் மற்றும் ஜனவரி 13 இரவு 9:29 இங்கிலாந்து நேரம். இவ்விரு வேளையிலும் சூரியன் மக்காவில் உள்ள கஃபதுல்லாஹ்விற்க்கு சரி - எதிர் திசையில் இருக்கும் (Antipodes)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு தினங்களும் உலகம் முழுவதும் பொதுவான நேரமாகும். இது தவிர ஒவ்வொரு ஊருக்கும் பொருத்தமான - கிப்லா திசையினை அறியும் நேரம் என்ற நேரங்களும் உண்டு. உதாரணமாக ஜூலை 1 அன்று காயல்பட்டினத்தில் மாலை 3:30 கிப்லா திசையினை அறியும் நேரமாகும். ஆகஸ்ட் 1 அன்று மதியம் 2:05 கிப்லா திசையினை காயல்பட்டினத்தில் அறியும் நேரமாகும்.
வருடம் முழுவதும் எந்தெந்த நேரங்களில் காயல்பட்டினத்தில் இருந்து - சூரிய நிழலை கொண்டு - கிப்லா திசையினை துல்லியமாக அறியலாம் என்ற விபரத்தை www.kayalsky.com என்ற இணையதளத்தில் இருந்து பெறலாம்.
தகவல்:
www.kayalsky.com |