உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா மற்றும் மாநில சாதனை மாணவியுடன் நகர பள்ளி மாணவ-மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகிய விழாக்களை, ஜூன் 24, 25 தேதிகளில் நடத்தின.
துவக்க நாளான 24.06.2011 அன்று மாலை 05.00 மணிக்கு பரிசளிப்பு விழா, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ,
தம்மாம் காயல் நற்பணி மன்றத் துணை தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ,
தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்,
ஜித்தா காயல் நற்பணி மன்ற துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர்,
சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத்,
இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரும், அதனை உருவாக்கியவர்களுள் ஒருவருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், 1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தின் முதன்மாணவியாகத் திகழும் ஓசூரைச் சார்ந்த கே.ரேகா தன் பெற்றோருடன் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அதுபோல, 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவரும், நகர சாதனை மதிப்பெண் பெற்றவருமான காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வும் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் கலந்துகொண்டார்.
இந்திய வணிகத்துறை அமைச்சகத்தின் தேயிலைத் துறை தென்னிந்திய முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆர்.டி.நஸீம் ஐ.ஏ.எஸ். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அடுத்து, மாநில சாதனை மாணவி கே.ரேகா, மாவட்ட முதன்மாணவரும், நகர சாதனை மதிப்பெண் பெற்றவருமான ஏ.எச்.அமானுல்லாஹ், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் அரசுப் பொதுத் தேர்வுகளில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர், தனிப்பாடங்களில் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியர், 1200 மொத்த மதிப்பெண்களில் 1000க்கும் மேல் மதிப்பெண் பெற்ற 73 மாணவ-மாணவியருக்கு பணப்பரிசுகளும், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள், பணப்பரிசுகளும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.
12ஆம் வகுப்பு நகர முதன்மாணவர்களுக்கான பரிசுகள்:
துவக்கமாக, ப்ளஸ் 2 தேர்வில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு தலா ரூ.3,000, ரூ.5,000, ரூ.7,500 பணப்பரிசுகள் ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அப்பரிசுகளை அம்மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ வழங்க, நகரின் முதன்மாணவர் - எல்.கே.மேனிலைப்பள்ளியைச் சார்ந்த ஏ.எச்.அமானுல்லாஹ், இரண்டாமிடம் பெற்ற அதே பள்ளியைச் சார்ந்த மாணவர் எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ், மூன்றாமிடம் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
அடுத்து, அதே மாணவ-மாணவியருக்கு தலா ரூ.2,000, ரூ.3,000, ரூ.5,000 பணப்பரிசுகளை சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத்தின் சார்பில் அம்மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர், முன்னாள் தலைவர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் ஆகியோர் பணப்பரிசுகளை வழங்கினர்.
10ஆம் வகுப்பு நகர முதன்மாணவர்களுக்கான பரிசுகள்:
அடுத்து, அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில், 10ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் நகரளவில் முதலிடம் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஆயிஷா ஷரஃபிய்யா, இரண்டாமிடம் பெற்ற அதே பள்ளியின் மாணவியரான சித்தி கதீஜா, சாம் சமீரா, எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஷஃபீக்குர்ரஹ்மான், மூன்றாமிடம் பெற்ற சுபைதா மேனிலைப்பள்ளி மாணவி சல்மா சியானா, எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் சுப்பையா என்ற கண்ணன் ஆகியோருக்கு தலா ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 பணப்பரிசுகளும்,
10ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் அரசு பொதுத் தேர்வில் நகரளவில் முதலிடம் பெற்ற எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ராஜலட்சுமி, இரண்டாமிடம் பெற்ற அதே பள்ளியின் மாணவி முஜாஹிதா, மூன்றாமிடம் பெற்ற சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ரிஸ்விய்யா ஆகியோருக்கு தலா ரூ.2,500, ரூ.2,000, ரூ.1,500 பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
அப்பரிசுகளை அமீரக காயல் நல மன்றத்தின் மூத்த முன்னாள் உறுப்பினர் ஹாஜி எஸ்.எச்.ஷெய்க் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, அதன் துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் உள்ளிட்டோர் வழங்கினர்.
ஹாஃபிழ் மாணவருக்கான பரிசு:
ஹாஃபிழ் மாணவர்களில் முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவரும், தாருத்திப்யான் திருக்குர்ஆன் மனனப் பயிலகத்தில் திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தவருமான ஹாஃபிழ் கே.பஷீர் ஜஃப்ரானுக்கு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில ரூ.5,000 பணப்பரிசை, அம்மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ வழங்கினார்.
10ஆம் வகுப்பு வாழ்நாள் சாதனை மதிப்பெண் பரிசு:
பின்னர், பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் வாழ்நாள் சாதனை மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, மர்ஹூம் ஹாஜி எம்.கே.டி.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் நினைவாக, அவர்களது மகன் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ ரூ.5,000 பணப்பரிசு வழங்க, அச்சாதனையை நிகழ்த்திய சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவி ஆயிஷா ஷரஃபிய்யாவின் தந்தை அப்பரிசைப் பெற்றுக்கொண்டார்.
பாடங்களில் மாநில சிறப்பிடங்களைப் பெற்றோருக்கான பரிசுகள்:
பின்னர், உளவியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி ஆர்.முத்துமாரிக்கு அமீரக காயல் நல மன்றம் சார்பில் அதன் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ ரூ.5,000 பணப்பரிசையும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர் ரூ.2,000 பணப்பரிசையும் வழங்கினர்.
10ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வில் அரபி மொழியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி எஸ்.எம்.ஏ.ஆயிஷா முஸ்ஃபிரா, மூன்றாமிடம் பெற்ற முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி எம்.எம்.செய்யித் ஹலீமா ஆகியோருக்கு இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் கலீல் ஆகியோர் வழங்கினர்.
நூறு சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது:
அடுத்து, ப்ளஸ் 2 தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் ரூ.2,500 பணப்பரிசும் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் விருதை வழங்க, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் சார்பில் அதன் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
சிறந்த பள்ளிகளுக்கான பணப்பரிசும், விருதுகளும்:
அடுத்து, நகரளவில் 75க்கும் மேல் எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகள் பிரிவில் சிறந்த பள்ளியாகத் தேர்வான சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளிக்கும், 75க்கும் கீழ் எண்ணிக்கையிலுள்ள பள்ளிகள் பிரிவில் சிறந்த பள்ளிக்கூடமாகத் தேர்வான சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளிக்கும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் ரூ.5,000 பணப்பரிசும், விருதும் வழங்கப்பட்டது.
இக்ராவின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அவற்றை வழங்க, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
அடுத்து, நகரின் அனைத்துப்பள்ளிகளிலும் முதலிடம் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளிக்கான விருதை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் வழங்க, அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
இரண்டாமிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளிக்கான விருதை, இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் வழங்க, அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா பெற்றுக்கொண்டார்.
மூன்றாமிடம் பெற்ற அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கான விருதை, இக்ராஃவின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வழங்க, அப்பள்ளியின் தலைமையாசிரியை யு.திருமலை பெற்றுக்கொண்டார்.
அறிவியல் கண்காட்சி நடத்தும் பள்ளிக்கான பணப்பரிசு:
அடுத்து, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் நகரளவில் முதலிடத்தில் தேர்வு செய்யப்படும் பள்ளிக்கு, நகரின் அனைத்துப் பள்ளிகளுக்குமான அறிவியல் கண்காட்சியை நடத்துவதற்கான செலவினங்களுக்காக, சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் ரூ.25,000 பணப்பரிசை அதன் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஏ.மெஹர் அலீ, செயற்குழு உறுப்பினர் எம்.எம்.புகாரீ ஆகியோர் இணைந்து வழங்க, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா அதனைப் பெற்றுக்கொண்டார்.
இக்கண்காட்சி, வரும் 28.7.2011 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்படவுள்ளது.
சிறந்த ஆசிரியர்களுக்கான பணப்பரிசு:
அடுத்து, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் நகரின் முதல் மூன்றிடங்களுக்குத் தேர்வாகும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் தலா ரூ.50,000, ரூ.30,000, ரூ.20,000 பணப்பரிசுகளை, அம்மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ வழங்க, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை யு.திருமலை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மாநிலத்தின் முதன்மாணவிக்கான பரிசு:
அடுத்து, ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி கே.ரேகாவுக்கு, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் ரூ.10,000 பணப்பரிசை, சிறப்பு விருந்தினர் ஆர்.டி.நஸீம் ஐ.ஏ.எஸ். வழங்கினார்.
நினைவுப் பரிசுகள்:
அடுத்து, இப்பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை வகித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மானுக்கு இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் நினைவுப் பரிசு வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் ஆர்.டி.நஸீம் ஐ.ஏ.எஸ்.க்கான நினைவுப் பரிசை இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி டைமண்ட் செய்யித் வழங்கினார்.
ப்ளஸ் 2 வாழ்நாள் சாதனை மதிப்பெண் பெற்றவருக்கான பரிசு:
அடுத்து, ப்ளஸ் 2 தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் வாழ்நாள் சாதனை மதிப்பெண் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு, உலக காயல் நல மன்றங்களின் சார்பில் ரூ.75,000 பணப்பரிசு வழங்கப்பட்டது.
இப்பரிசுத் தொகைக்கு இணைந்து அனுசரணையளித்த
தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் அதன் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ,
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் செயலர் மொகுதூம் முஹம்மத்,
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப்,
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் அதன் துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்,
கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ்,
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் அதன் அறங்காவலர்களான பி.ஏ.புகாரீ, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அத்துடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. |