செய்தி எண் (ID #) 7510 | | |
ஞாயிறு, நவம்பர் 6, 2011 |
‘இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் கலைஞர் பட்டினமே!‘ -திமுக செயலாளர் அறிக்கை!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5258 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய |
|
‘காயல்பட்டினம் என்றும் கலைஞர் பட்டினமே‘ என திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நகராட்சி துணைத்தலைவர் தேர்வு பற்றி திமுக வெளியிட்ட அறிக்கைக்கு, இணையதளத்தில் வெளிவந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து காயல்பட்டணம் நகர திமுக செயலாளர் மு.த.ஜெய்னுதீன் ஆகிய நான் வெளியிடும் அறிக்கை...
காயல்பட்டணம் நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் நகர திமுக துணைச் செயலாளர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நகர திமுக வெளியிட்ட அறிக்கை பற்றி சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். திமுக அறிக்கையை சரியாகப் புரிந்து கொள்ளும் சக்தி அவர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.
திமுக ஆதரவளித்தும் தலைவர் வேட்பாளர் ஏன் தோற்றார் என்று கேட்டிருக்கிறார்கள். நமதூர் வழமைப்படி தலைவர் தேர்தலில் கட்சிகள் போட்டியிடுவதில்லை என்பதாலும், ஊர் ஒற்றுமையை கருதியும் திமுக தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிட்டு இருந்தால் எங்கள் தேர்தல் வேலை வேறு மாதிரி இருந்திருக்கும். வெற்றி பெற்றிருப்போம்.
ஊர் வழமைப்படி தலைவர் வேட்பாளர் தேர்வோடு இந்த விஷயம் முடிந்து விடும். ஆனால் தற்போது தேர்தல் வரை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்குண்டான ஏற்பாட்டிலும் யாரும் தயாராக இல்லை. தேர்தல் நிச்சயம் என்று ஏற்கனவே தெரிந்திருந்தால், ஊர் வேட்பாளருக்கு ஆதரவு அளித்த திமுக மற்றும் அனைத்து கட்சிகளின் வியூகமும், வேலைகளும் வேறுமாதிரி அமைந்திருக்கும்.
ஏற்கனவே திட்டமிட்டு, எவருக்கும் தெரியாமல் சதி செய்து, வஞ்சகமாக சிலர் போட்டியினை உருவாக்கிவிட்டனர். புறநகர் மக்களிடம் அந்த சிலர் முஸ்லீம் ஜமாத்துகளை தவறாக காட்டிக் கொடுத்தார்கள். அவர்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்தார்கள்.
புறநகர் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஊர் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி, மதுபானம் வழங்கியதாக பிரச்சாரம் செய்தார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை முஸ்லீம்களிடத்தில் மட்டும் கெட்டிக்காரத்தனமாக செய்தார்கள். இதில் அவர்கள் இறைவனுக்கு அஞ்சவில்லை. இதன் மூலம் அந்த சிலர் புறநகர் பகுதி மக்களை கேவலப்படுத்தினார்கள். சொந்த சமுதாயத்தில் பிளவை உண்டாக்கினார்கள்.
இவ்வாறெல்லாம் வஞ்சகமாக, அனைவரையும் ஏமாற்றி தங்கள் ஆதரவு வேட்பாளரை வெற்றி பெறச் செய்தார்கள். இந்த தேர்தல் எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவம். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு பதிலடி கொடுக்க போதிய காலம் இல்லை. அதற்குள் தேர்தல் நெருங்கி விட்டது. இதுதான் உண்மை.
உதயசூரியன் சின்னத்தில் வார்டுகளில் திமுக வெற்றி பெற்றதா என்று கேட்கிறார்கள். இல்லைதான். காரணம் இத்தேர்தலில் வார்டுகளிலும் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டாம் என ஊர் பெரியோர்கள் கேட்டுக் கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் கட்சி சின்னத்தில் வார்டுகளில் நாங்கள் நின்றிருந்தால் ஒரு வேளை இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.
அரசியல் கட்சிகள் ஊர் வழமையை மதித்தன. ஆனால் கட்சிகளை குறை சொல்வோர் ஊர் வழமையை மதிக்கவில்லை. எனவே இவர்களுக்கு கட்சிகளை குறை சொல்ல யோக்கியதை இல்லை.
தங்கள் ஆதரவு வேட்பாளர் வெற்றிபெற ஊர் ஒற்றுமையை இவர்கள் குலைத்தார்கள். எனவே, துணைத்தலைவர் தேர்தலிலாவது இவர்களின் ஆட்டத்தை அடக்க வேண்டுமென திமுக முடிவு செய்து போட்டியிட்டது. இதுதான் உண்மை.
மேலும், தற்போது நோட்டீஸ் மூலமும், பொதுக் கூட்டத்திலும் சிலர் திமுகவை தாக்குகிறார்கள். அதற்குரிய பதிலடி விரைவில் தரப்படும்.
எந்த எதிர்ப்புக்கும், மிரட்டலுக்கும் திமுக பயப்படாது. இதுதான் கடந்த கால வரலாறு. வருங்காலத்திலும் அது தொடரும். திமுகவை சிலர் சீண்டிப் பார்க்கின்றனர்.
இப்போதும் சொல்கிறோம். காயல்பட்டணம் எப்போதும் கலைஞர் பட்டணமே!
இவ்வாறு திமுக காயல்பட்டினம் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |