காயல்பட்டினம் பிரதான வீதியில், எஸ்.ஜே.எம்.மெடிக்கல்ஸ் நிறுவனத்திற்கெதிரில் அமைந்துள்ளது “உமர் ஹோட்டல்” என்ற பெயருடைய உணவகம் (புரோட்டா ஸ்டால்). இதுவரை வேறு பெயர்களில் நடத்தப்பட்டு வந்த இந்த உணவகத்தை, காயல்பட்டினம் மருத்துவர் தெருவைச் சார்ந்த உவைஸ் (40) மற்றும் உமர் (36) ஆகியோர் உரிமையெடுத்திருந்தனர். இன்று ஹஜ் பெருநாள் என்பதால் கடை பூட்டப்பட்டிருந்தது.
நாளை திறக்க திட்டமிட்டிருந்த இக்கடையில், அதற்கு ஆயத்தமாக சமையல் பாத்திரங்கள், பொருட்கள், எரிவாயு உருளைகள் (கேஸ் சிலிண்டர்) கடைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மதியம் சுமார் 01.30 மணியளவில், பூட்டப்பட்ட இக்கடைக்குள்ளிருந்து கரும்புகை வெளியேறியிருக்கிறது. உட்புறம் தீ எரிவதை இதன்மூலம் தெரிந்துகொண்ட அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர்.
விரைந்து அவ்விடம் வந்த ஆறுமுகநேரி காவல்துறை உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான காவலர் குழு நிகழ்விடத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டனர்.
திருச்செந்தூரிலிருந்து சில மணித்துளிகளில் நிகழ்விடத்தை வந்தடைந்த தீயணைப்புப் படையினர், கடையைத் திறந்து, துரிதமாக செயல்பட்டு அங்கிருந்த எரிவாயு உருளைகளை வெடித்துவிடாமல் பாதுகாப்பாக வெளியில் போட்டனர். பின்னர், கட்டிடத்தில் எரிந்துகொண்டிருந்த தீயை அவர்கள் அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக அவ்விடத்தில் பெரும் மக்கள் திரள் பரபரப்புடன் கூடியது. பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துகள் சுமார் 1 மணி நேரத்திற்கு மாற்றுப்பாதையில் சென்றது.
கடைக்குள்ளிருந்த எரிவாயு உருளைகள் உரிய நேரத்தில் பாதுகாப்பாக வெளியில் எடுக்கப்பட்டதால், அது வெடிக்காமல் பாதுகாக்கப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சதக்கு உமர்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
படங்கள்:
‘மெகா‘ செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |