ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் ஆபிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாப் புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
எனதன்பான காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி ஆபிதாவின் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறைத்தூதர் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவுகூரும் இந்த தியாகத் திருநாளில், உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதற்கு அப்படியே கட்டுப்பட்டு நடந்தவர்கள்... அவ்வாறு நடக்கையில் தம் சுய விருப்பு - வெறுப்புகளை சிறிதும் கருத்திற்கொள்ளாது வாழ்ந்து காட்டியவர்கள்...
இறைக்கட்டளை என்றதும் ஈன்றெடுத்த தன் மகனாரைக் கூட பலி கொடுக்க முன்வந்த சம்பவம் நமக்கெல்லாம் நல்லதொரு முன்னுதாரணமாக உள்ளது.
ஆம்... நித்தியமற்ற - நிச்சயமற்ற - அற்பமான இவ்வுலக வாழ்வில், எதுவும் நமக்கு சொந்தமில்லை என்பதை தம் வாழ்வால் மக்களுக்கு உணர்த்திய மனிதப்புனிதர் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு, கண்மணி நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த நெறிமுறைகள் படி நம் வாழ்வை அமைத்துக்கொள்ள இந்த நல்ல நாளில் நாம் சபதம் மேற்கொள்வோம்...
நல்லவற்றைச் செய்திட நம்மால் இயன்ற எந்த தியாகத்தையும், தீயவற்றைத் தடுத்திட இறைவனைத் தவிர யாருக்கும், எதற்கும் அஞ்சாத தன்மையையும் கொண்டு நாம் வாழ முன்வந்தால், அதுதான் இந்த பெருநாளை நாம் கொண்டாடுவதற்கான தகுதி நிர்ணயமாகும்.
கருணையுள்ள ரஹ்மான் அல்லாஹ் நம்மை அந்த அடிப்படையில் வாழ்ந்து, அவனருளை முழுமையாகப் பெற்று, ஈருலக நற்பேறுகளையும் நிறைவாகப் பெற்றிடச் செய்வானாக, ஆமீன்.
அனைவருக்கும் எனதன்பான தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! ஈதுல் அள்ஹா முபாரக்!!
இவ்வாறு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |