மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலையறிக்கையால், தங்க நகை வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அதனைக் கண்டித்து நாடு முழுவதிலுமுள்ள தங்க நகைக்கடைகள், 17.03.2012 அன்று மதியம் முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளன. விபரம் பின்வருமாறு:-
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதிநிலையறிக்கையில், தங்க நகைகள் மீது இறக்குமதி வரியாக 2 முதல் 4 சதவீதம் அளவிற்கும் கலால் வரியாக ஒரு சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனை வரி 4 சதவீதமாக்கப்படுகிறது. உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2 லட்சத்திற்கும் மேல் தங்கம் வாங்குவோர் தங்களுடைய பான் கார்டை காண்பிக்க வேண்டும் என்று புதிய உத்தரவும் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கநகை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து நகை கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சுங்க வரி 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் தங்கம் வாங்குவோரும், விற்போரும் பாதிக்கப்படுவர். இது நகை கடத்தலை ஊக்குவிக்கும். இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்...
பான் கார்டு என்பது எல்லோரும் வைத்திருப்பது அல்ல. விவசாயி ஒருவர் நகைகள் வாங்கும் போது அவர் எப்படி பான் கார்டை காட்ட முடியும்? மத்திய அரசு இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்...
இவ்வாறு நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 17.03.2012 அன்று மதியம் முதல் 3 நாட்களுக்கு நகை கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, காயல்பட்டினத்திலுள்ள ஏ.கே.எம். ஜுவல்லர்ஸ், எல்.டி.எஸ். கோல்டு ஹவுஸ், ஜுவெல் ஜங்ஷன் ஆகிய நகைக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ள காட்சிகள் பின்வருமாறு:-
|