காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் தபால் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மியால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
நகராட்சியில், வீடு வரைபட ஒப்புதல் (ப்ளான் அப்ரூவல்), தீர்வை பிரச்சினைகள், குடிநீர் இணைப்பு கோரும் விண்ணப்பங்கள், இதர முறையீடுகள் என அனைத்து விண்ணப்பங்களையும் பொதுமக்கள் இப்பெட்டியில் போடலாம்...
தினமும் ஒரு முறையோ, தேவையைப் பொருத்து இரு முறைகளோ நான் இப்பெட்டியைத் திறந்து, அதிலுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தரம் பிரித்து, மேல் நடவடிக்கைக்காக அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைத்து கண்காணிப்பேன்...
பொதுமக்கள், முதல் நாள் பெட்டியில் விண்ணப்பங்களை இட்டுச் செல்லலாம்... மறுநாள் அதற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்...
இதுவரை நடைமுறையிலிருந்த முறைப்படி, பொதுமக்கள் விண்ணப்பங்களை வெகுநேரம் தம் கைகளில் வைத்து காத்திருந்து, ஆணையரிடம் சமர்ப்பித்து அதற்கான ஒப்புகைச் சீட்டை அவ்விடத்திலேயே பெற்றுச் செல்லும் நிலையிருந்தது... இம்முறையால், பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான மேல் நடவடிக்கைகள் சில நேரங்களில் கவனக்குறைவாக தாமதமாகி விடுகின்றன...
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தமது விண்ணப்பங்களை பெட்டியிலிட்டதற்கான அத்தாட்சி எதுவும் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,
இதனால் எந்த ஒரு முறைகேடும் நடந்துவிடப் போவதில்லை... விண்ணப்பதாரர்கள் அன்றே பெற வேண்டிய ஒப்புகைச் சீட்டை அடுத்த நாள் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள்... அவ்வளவுதான்!
நான் அலுவலகத்திற்கு வராத நாட்களில் பெட்டிக்குள் இடப்படும் விண்ணப்பங்களை மறுநாள் நான் வந்து பார்த்து பரிசீலிப்பேன்... இதனால் ஒரு நாளோ அல்லது சில நாட்களோதான் கூடுதலாகும்...
எல்லா நகராட்சிகளிலும் நடைமுறையிலுள்ள ஒரு திட்டம்தான் இது... நம் நகராட்சியில் தற்போது நான் அறிமுகப்படுத்தியுள்ளேன்... என்றார்.
எனினும், இச்சேவையை இன்னும் வெளிப்படையாக்கிட, பொதுமக்கள் பெட்டிக்குள் விண்ணப்பங்களைப் போடுவதற்கு முன்பாக, முனை நீட்டியமைக்கப்பட்ட உறை ஒன்றை நகராட்சி வடிவமைத்து, அதிலுள்ள விண்ணப்பத்தை சிறு இடைவெளியுடன் தடுப்பமைத்து, அதன் நீட்டப்பட்ட முனையை இரு பிரிவுகளாக்கி, விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டதற்கான விபரங்களை இரண்டு பிரிவுகளிலும் குறித்து, அதிலொன்றை விண்ணப்பதாரரிடம் கிழித்துக் கொடுத்தால், இச்சேவை முழு நம்பகத்தன்மையைப் பெற்றிடும் என்பதில் சந்தேகமில்லை.
|