மின் உற்பத்தி பற்றாக்குறையை சமாளிக்க, தமிழகமெங்கும் தினமும் பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் சுற்றுப்புறப் பகுதிகளில் தினமும் அதிகாலை 06.00 மணி முதல் 09.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரையிலும், இரவில் சிறு சிறு இடைவெளிகளுடன் சுமார் இரண்டு மணி நேரமும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
வழமைக்கு மாற்றமாக நேற்று நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை மின்தடை செய்யப்படவில்லை. இதுகுறித்து காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் வினவுகையில், கோவில்பட்டி - தூத்துக்குடி - திருச்செந்தூர் - சாத்தான்குளம் பகுதிகளிலிருந்து மின்வாரிய உயரதிகாரிகள் குடியிருப்புகளில் தீடீர் சோதனை நடத்தி, மின் வினியோகத்தை முறைகேடாகப் பயன்படுத்துவோரைக் கண்டறியச் சென்றதாகவும், அதனால் நேற்று நண்பகலில் மின்தடை செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
உயரதிகாரிகள் சோதனை செய்ததில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் மின் வினியோகத்தை முறைகேடாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தண்டத்தொகை விதிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது. |