தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதே இலக்கு என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வரின் உரையினை முழுமையாக படிக்க இங்கு அழுத்தவும்
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்
தமிழக அரசின் 'தொலைநோக்கு திட்டம் 2023' என்கிற ஆவணத்தை சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 22) வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்கிற ஆவணத்தை வெளியிடும் இந்த நிகழ்வு, மாநிலப் பொருளாதார வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்தேன்.
தமிழகத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பினை அளித்து, மாநிலத்தில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதே எனது கனவு. மாநிலத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அடிப்படை வசதிகளான மருத்துவம், கல்வி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.
பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் தமிழகம் முதன்மையாகத் திகழ்ந்து, அறிவார்ந்த பொருளாதாரம் மிக்க மாநிலமாக விளங்க வேண்டும் என்கிற எனது கனவுகளை உள்ளடக்கி இந்த தொலைநோக்குத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் வகையில் நீடித்த திட்டமிடல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி மலம் கழித்தல்: மாநில மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்கு முன்னதாகவே கிடைக்கச் செய்வது எனது கனவாகும். திறந்த வெளியில் மலம் கழித்தல் என்பது மாநிலத்தில் முற்றிலுமாக அகற்றப்படும்.
மேலும், 25 லட்சம் வீடுகளைக் கட்டிக் கொடுத்து தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டுமென்பதே லட்சியம். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி, கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மாணவர் சேர்ப்பை அதிகரிப்பது போன்றவையும் நோக்கங்களாக உள்ளன.
மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தரமான சாலைகளும், பாதுகாப்பான பலவழிச் சாலைகளும் 2023-ம் ஆண்டுக்கு முன்னதாகவே ஏற்படுத்தப்பட வேண்டும்.
தடையில்லாத மின்சாரம்: தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வணிக நிறுவனத்துக்கும், தொழிற்சாலைக்கும், கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான தடையில்லாத மின்சாரம் கிடைத்திட வேண்டும். அதை உறுதி செய்திட நீட்டித்த எரிசக்தி பாதுகாப்பு அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்க கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
இப்போது வெளியிடப்பட்டுள்ள தொலைநோக்கு திட்டம் வெற்றியடைய வேண்டுமானால் மிக முக்கியமான தேவையாக இருப்பது மனித வளமாகும். அடுத்த 11 ஆண்டுகளில் 2 கோடிப் பேருக்கு உரிய பயிற்சிகளை அளித்து அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்க தொலைநோக்கு திட்டம் வழி செய்கிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் இரண்டாவது பசுமைப் புரட்சி ஆகியன மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை. உலகத் தரம்வாய்ந்த 10 நகரங்களை உருவாக்கவும் தொலைநோக்கு திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சம் கோடி: தொலைநோக்கு திட்டத்தில் உள்ள அம்சங்களைச் செயல்படுத்த ஒட்டுமொத்த முதலீடாக ரூ.15 லட்சம் கோடி தேவையென மதிப்பிட்டுள்ளோம். மாநில அரசு மட்டும் தனியாக இந்த முதலீடைச் செய்ய முடியாது. உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் தனியார்கள், வங்கிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதலீடுகள் அதிகளவு வந்து சேரும் சிறந்த மாநிலமாக தமிழகம் ஏற்கெனவே திகழ்கிறது. இந்த நிலையில், ஆசியாவில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக தமிழகம் திகழ தொலைநோக்கு திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேவை வழங்கும் துறைகளில் தனியார்களின் பங்களிப்பை அதிகளவு வரவேற்பதில் அரசு கவனம் செலுத்தும்
என்றார் முதல்வர்.
சிறப்பு அம்சங்கள்:
<><> குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற 25 லட்சம் வீடுகள் கட்டப்படும்
<><> அனைவருக்கும் இடைநிலைக் கல்வி; கல்லூரிகளில் சேர்க்கையை 50 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிப்பது
<><> ஒவ்வொரு மாவட்டத்திலும் தரமான பல வழிச் சாலைகள்
<><> 2 கோடிப் பேருக்கு மனிதவளப் பயிற்சி
<><> உலகத் தரம் வாய்ந்த 10 நகரங்கள்
<><> அனைவருக்கும் சுகாதார வசதிகள்; திறந்தவெளி மலக் கழிப்பு ஒழிப்பு
<><> அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்
செய்தி::
தினமணி |