இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் நகர கிளையில் பெண்களுக்கென தனியிட வசதி செய்யப்பட்டு, வங்கிச் சேவை செய்திட - வங்கியின் துவக்க காலம் முதல் ஏற்பாடுகள் உள்ளன.
ஆனால், அண்மைக் காலமாக பெண்களுக்கு அவர்களது தனிப்பகுதியில் வங்கிச் சேவை வழங்குவதற்கு பதிலாக, ஆண்கள் பகுதிக்கு வரவழைப்பதாக வாடிக்கையாளர்கள் பலர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட நகரின் பொதுநல அமைப்புகளிடம் முறையிட்டனர்.
அதனையடுத்து, அண்மையில் நடைபெற்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் கலந்தாலோசனைக் கூட்டத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், பெண்களுக்கு அவர்களின் தனிப்பகுதியிலிருந்தவாறே வங்கிச் சேவைகளைத் தொடர்ந்து பெற்றிட வங்கி மேலாளருக்கு கட்சியின் சார்பில் கோரிக்கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 22.03.2012 அன்று (நேற்று) மாலை 04.00 மணியளவில் அக்கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர நிர்வாகிகளுள் ஒருவரான ஆசிரியர் மு.அப்துல் ரசாக், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காயல்பட்டினம் கிளையின் மேலாளர் குணசேகரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த வங்கியில், வழமை போல பெண்கள் அவர்களின் தனிப்பகுதியிலிருந்தவாறே வங்கிச் சேவைகளை நிறைவாகப் பெற்றிட ஆவன செய்யுமாறு அக்கடிதத்தில் அவர்கள் கோரியிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட வங்கி மேலாளர், வங்கியின் ஆண் - பெண் உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிறைவான சேவையை அளிக்க தாம் ஆயத்தமாகவே உள்ளதாகவும், எனினும் அலுவலர் பற்றாக்குறை காரணமாக சில காலம் பெண்கள் ஆண்கள் பகுதிக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்சமயம் புதிதாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மூலம் ஓரளவுக்கு பெண்கள் பகுதி வழியாகவே பெண் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ஆளில்லா பணியிடங்களனைத்திற்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டால் இக்குறை முழுமையாக சரிசெய்யப்படுமெனவும் தெரிவித்தார். |