தூத்துக்குடி-சென்னை இடையே புதிய ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை கோரிக்கை விடுத்தார்.
மத்திய ரெயில்வே பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:-
ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் பாதுகாப்பு, புதிய வழித்தடங்கள் அறிமுகம், இரட்டை வழி தடங்கள், அடிப்படை தேவைகள் போன்ற தொலை நோக்கு பார்வையுடன் அமைந்துள்ளதால் நான் மனமார வரவேற்கிறேன்.
தூத்துக்குடி துறைமுக நகரம். இங்கே பல தொழிற்சாலைகள் நகரத்தின் உள்ளேயும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கி வருகிறது. தூத்துக்குடியில் மட்டும் பல அனல்மின்நிலையங்கள் இருப்பதாலும், புதிதாக உருவாக்கப்பட இருப்பதாலும், ரெயில் சேவை அதிகம் தேவைப்படுகிறது. ஆகவே, மதுரை&தூத்துக்குடி இடையே இரட்டை வழித்தடத்தை விரைவில் அமைக்கவும், மதுரை-தூத்துக்குடி இடையே மின்மயமாக்கும் வேலையை விரைவில் நடைமுறைபடுத்தவும் கேட்டுக் கொள்கிறேன்.
திருநெல்வேலி &திருச்செந்தூர் இடையே ஓடும் பாசஞ்சர் ரெயில் (எண்: 56761) சுமார் 5 மணி நேரமும், வண்டி எண்: 56763 சுமார் 6 மணி நேரமும் திருச்செந்தூரில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பஸ் கட்டண உயர்வால், ரெயிலில் செல்லும் பயணிகள், வியாபாரிகள், மாணவர்கள், பணிக்கு செல்வோர் அதிகமாகியிருக்கிறார்கள். அதனால் மேலே குறிப்பிட்ட ரெயில் வண்டிகளை இந்த நேரத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் இடையே கூடுதலாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயணிகளின் வேண்டுகோளாக திருச்செந்தூரிலிருந்து சென்னை வரும் பொழுதும், சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரும்போதும், அதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும்போதும், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும்போதும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஆணையிட வேண்டும்.விவேக் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரெயிலை தூத்துக்குடியிலிருந்து இயக்க வேண்டும்.
இந்த ஆண்டு ரெயில் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருச்சி திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஒரு புதிய ரெயில் இயக்க வேண்டும்.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் தூத்துக்குடி-மதுரை இடையே ஒரு புதிய பகல் நேர ரெயிலை அறிமுகப்படுத்த ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை பேசினார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |