காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் அமைப்புப் பணிகள் நிறைவுற்று முறைப்படி துவக்கப்பட்ட பின்னரும், பெரும்பாலான பேருந்துகளின் ஓட்டுனர்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவின் வழியாக பேருந்துகளை ஓட்டிச் செல்வது வழமையாக இருந்துவந்தது. இதனால், பேருந்துகளை எதிர்பார்த்து பேருந்து நிலையத்திற்குள் காத்திருந்த பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இதனையடுத்து சில மாதங்களில், மகாத்மா காந்தி வளைவின் நடுவில் பெரிய இரும்பு உருளையைக் கிடத்தி, பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்று வரும் வகையில் - கனரக வாகனங்கள் செல்லாத அளவுக்கு பாதை மறைக்கப்பட்டது.
இந்நிலையில், கிடத்தப்பட்டிருந்த உருளை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அகற்றப்பட்டுள்ளது.
உருளையை அவ்விடத்தில் கிடத்தியோர், அவ்வப்போது அகற்றியோர், மீண்டும் கிடத்தியோர், தற்போது அகற்றியோர் யாரென யாரும் அறிய இயலாத அளவுக்கு புரியாத புதிராகவே உள்ளது. |