தூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கடற்கரையில், 25.03.2012 அன்று மாலையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை பின்வருமாறு:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
தங்கத் தமிழகத்தின் வங்கக் கடலோரம் அமைந்துள்ள முத்து மாவட்டமாம் தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளி விழா நிகழ்ச்சியில், அம்மாவட்டத்தின் ஓர் அங்கமாய் அமைந்துள்ள - அமைதிக்கு வழிகாட்டும் ஆன்மிகப் பட்டினம் காயல்பட்டினம் நகரின் நகர்மன்றத் தலைவராகிய எனக்கு இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்துரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை எண்ணி பூரிப்பும், பேருவகையும் அடைகிறேன்...
சிறப்புமிக்க இவ்விழாவில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள ஆன்றோர், சான்றோர், பெரியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
பெருமையுடன் வெள்ளி விழா காணும் எம் தூத்துக்குடி மாவட்டம், அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று, எல்லா துறைகளிலும் - அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடியாக - முன்மாதிரியாகத் திகழ வேண்டும்... இம்மாவட்டத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்காக இம்மாவட்டம் ஒளிர வேண்டும்...
இம்மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சியமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளும் பொதுநல நோக்குடன் செயல்பட்டு, தத்தம் நகரை - ஊரை எல்லா நிலைகளிலும் தன்னிறைவு பெற்றதாக உருவாக்கினால், நமது முத்து மாவட்டம் தன்னிகரில்லா முதன்மாவட்டம் என்ற பெருமையை தானாகவே பெற்றுச் சிறக்கும்... அப்பெருமையை தமிழகத்திற்கு மட்டுமல்ல! ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பறைசாற்றும் காலம் வெகுதூரத்தில் இல்லை... அதற்கான முயற்சிகளை இந்நாளிலிருந்தே நாம் துவங்குவோம்... நல்ல - பயனுள்ள விஷயங்களில் இணைந்து செயலாற்றுவோம்...
நற்சிந்தனையுடனும்
தூய்மையான எண்ணங்களுடனும்
ஒற்றுமையுடனும்
ஒருமைப்பாட்டுணர்வோடும்
அமைதியான நெறியிலே
ஆக்கப்பூர்வமான வழியிலே
சாதனைகள் பல கண்டு
வளர்ச்சிப் பாதையில் நின்று
வெற்றி வாகை சூடிட
எமது காயல்பட்டினத்தின் அனைத்து சமுதாய மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன்... நன்றி!
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா பேசினார். விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், இணை கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களுக்கு சால்வைகளை அளித்தும் - அணிவித்தும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இச்சந்திப்பின்போது அவரது கணவர் ஷேக் உடனிருந்தார். |