தூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். விபரம் பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் நெல்லை மாவட்டத்திலிருந்து தனியாக பிரிந்த பின்னர் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளிவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன் துவக்கமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் குறு நீள்ஓட்டப்போட்டி - மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
வெள்ளி விழா கொண்டாட்டத்தின் துவக்க விழா, 25.03.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இவ்விழாவில், ஆர்.பாக்யராஜ் இசையமைப்பில், எம்.இசக்கியப்பன் எழுத்தில், திரைப்பட பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடி தயாரிக்கப்பட்ட - தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய சிறப்புகளை வெளிப்படுத்தும் விதத்திலான பாடல் குறுந்தகடு - சிடி வெளியிடப்பட்டது.
அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வெள்ளி விழாவையொட்டி நேற்று காலை நடந்த மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, வெள்ளி விழா சின்னத்தையும், பாடல் குறுந்தகட்டையும் வெளியிட, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா அவற்றைப் பெற்றுக் கொண்டார்.
இப்பாடலைக் கேட்க இங்கே சொடுக்குக!
பின்னர், மாவட்ட ஆட்சியர் தலைமையுரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-
தென்கோடி நுழைவு வாயிலாகத் திகழும் துறைமுக நகரான தூத்துக்குடி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சாரம், பாரம்பரியத்தில் சிறந்து விளங்கியுள்ளது. அதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் கிடைக்கப் பெற்றுள்ளது.
விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்த பூமிதான் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். உப்பு தொழில், தீப்பெட்டி தொழில் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் இது. இங்கு அனைத்து சமயங்களின் ஏராளமான ஆன்மிக திருத்தலங்கள் உள்ளன.
இந்த வெள்ளி விழா கொண்டாட்டம் 7 மாதங்கள் நடைபெறும். வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சுற்றுலா தலங்களும், விளையாட்டுத்துறையும் மேம்படுத்தப்படும்.
புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவர். நாட்டுப்புற கலைகள் ஊக்குவிக்கப்படும். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்.
இவ்வாறு, மாவட்ட ஆட்சியரின் உரை அமைந்திருந்தது. பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு என்ன கேட்டாலும் செய்து தருவதற்கு முதல்-அமைச்சர் தயாராக இருக்கிறார். தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் அனைவரும் இடம்பெற்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த வெள்ளி விழா கொண்டாடத்தில் முதல்வரும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வேன். தூத்துக்குடி மாவட்டம் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனி பற்று உண்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். தூத்துக்குடி சிறிய நகரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார். இது வரவேற்கத்தக்கது. வியாபாரிகளுக்கு சிரமம் கொடுக்காமல் இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேணடும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உரையாற்றினார்.
உரைகளைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் துவங்கின. தென்னக கலை - பண்பாட்டு துறை சார்பில் ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இவ்விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் உட்பட, பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி வஉசி துறைமுக கடற்கரை மைதானத்தில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சியும், சிற்றுண்டி விற்பனை அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜெந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா, திட்ட இயக்குநர் அருண்மணி, கடலோர காவல்படை கமாண்டர் ஆனந்தகுமார், ஜே.எஸ்.பி.சோனல் சந்த்ரா, காயல்பட்டினம் நராட்சி தலைவர் ஐ.ஆபிதா, முக்கிய பிரமுகர்களான ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், ஏ.வி.எம்.மணி, ராஜாசங்கரலிங்கம், லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் சாமுவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். |