வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சிறுபான்மை மகளிருக்கு, சணல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சி 26.03.2012 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு, காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள அரசு கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தனது தேர்தல் வாக்குறுதிகளடங்கிய அறிக்கையில், 11ஆவது வாக்குறுதியாக, “பெண்கள் சொந்தக் காலில் நின்று, சுயமாக தொழில் செய்து, பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு, நகரிலுள்ள சுய உதவிக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, சாதார பெண்களை சாதனைப் பெண்களாக்கும் வழிகளை ஆராய்ந்து, செயல்திட்டங்களை வடிவமைத்து முயற்சிகள் மேற்கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் அவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் தூண்டுதலில், மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இம்முகாம் நடைபெறுகிறது.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு நல அலுவலர் ராஜேஷ்வரி இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, முகாமைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
15 நாட்கள் கால அளவு கொண்ட இம்முகாமில் தரப்படவுள்ள பயிற்சிகள் குறித்து, மதுரையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஜான் சேவியர் விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்வில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜே.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி ஆகியோரும், காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், அதன் நிர்வாகிகளான எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஜி கம்பல்பக்ஷ் மொகுதூம் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்முகாமில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த மகளிருக்கு பயிற்சியாளர் ஜான் சேவியர் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
காயல்பட்டினம். |