காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், முதல் கூட்டம் 25.01.2012 அன்று நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெற வேண்டிய கூட்டம், சங்கரன்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு - தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையிலிருந்த காரணத்தால் நடத்தப்படவில்லை.
மார்ச் மாத கூட்டம், 28.03.2012 புதன்கிழமையன்று மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, காயல்பட்டினம் நகராட்சி மன்ற வளாகத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் மற்றும் நகராட்சியின் அலுவலர் குழுவினர் பங்கேற்ற இக்கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களும், பொது நல அமைப்பினரும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகள் குறித்து மனு அளித்தனர்.
குடிநீர் வினியோகம், குடிநீர் குழாய் பிரச்சினைகள், சாலை பராமரிப்புப் பணிகள், தெரு விளக்கு பராமரிப்புப் பணிகள், பொதுப்பணி என மொத்தம் 38 கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.ஏ.சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர். ஜே.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், ஏ.அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோர் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். |