காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட - நகர பொதுநல அமைப்புகள் பங்கேற்கும் - சமுதாய விழிப்புணர்வு கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகரின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில், நகரின் இளம் ஆண் - பெண்களிடையே இருக்க வேண்டிய கலாச்சாரம், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் 25.03.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணியளவில், காக்கும் கரங்கள் அமைப்பின் அலுவலக வெளி மாடியில் நடைபெற்றது.
காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா முன்னிலை வகித்தார்.
எச்.எல்.அப்துல் பாஸித் கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தின் நோக்கம் குறித்து, அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட நகர பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பின்னர், பின்வரும் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(01) பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியரிடம் கைபேசி (மொபைல் ஃபோன்) வழங்க வேண்டாம் என பெற்றோரை வலியுறுத்தல்...
(02) வீடுகளில் இன்டர்நெட் பயன்படுத்துவதாயின், தனியறையிலில்லாமல், அனைவர் பார்வையிலும் இருக்கும் வகையில் கணனியை வைத்து பயன்படுத்த வலியுறுத்தல்...
(03) பள்ளி - கல்லூரிகளுக்கு மாணவர்கள் முறையாக சென்று வருகின்றனரா என்பதை - அவர்களின் பெற்றோர் கண்காணிக்க வலியுறுத்தல்...
(04) பதினெட்டு வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு பீடி - சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களை வழங்காதிருக்க கடைக் காரர்களை வலியுறுத்தல்...
(05) மொபைல் ஃபோன்களுக்கான ரீசார்ஜை - கடைக்காரரிடம் கைபேசி எண்ணைக் கொடுத்து ஈஸி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்த்து, ரீசார்ஜ் அட்டைகள் மூலமே ரீசார்ஜ் செய்திட பொதுமக்களை வலியுறுத்தல்...
(06) பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியரின் நட்பு வட்டங்களை பெற்றோர் - உறவினர்கள் நன்கு கண்காணிக்க வலியுறுத்தல்...
(07) பள்ளிகளில் முன்பு நடத்தப்பட்டு வந்த நீதி போதனை (Moral Education) மீண்டும் கொண்டு வர ஆவன செய்தல்...
(08) நகரில் ஓடும் ஆட்டோக்களுக்கு தேவையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்திட ஆவன செய்தல்...
(09) இருபாலர் கல்விமுறை (கோ-எஜுகேஷன்) பள்ளிகளையும் - கல்லூரிகளையும் தவிர்த்திட பொதுமக்களை வலியுறுத்தல்...
(10) மாணவர்கள் முறையாக மார்க்கக் கல்வியையும், ஜும்ஆ தொழுகையையும் பெற்றிடும் வகையில் - முன்பு போல வெள்ளிக்கிழமையில் வார விடுமுறையை அறிவிக்க பள்ளிகளை வலியுறுத்தல்...
(11) காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் தீர்மானித்துள்ள படி, கடற்கரை ஆண்கள் - பெண்கள் - குடும்பத்தினருக்கும், விளையாடுவதற்கும் என நான்கு பகுதிகளாக பிரிக்க வலியுறுத்தல்...
மேற்கண்ட தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. |