இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் கிளை அலுவலகத்தில், பெண்கள் தனிப்பகுதி சேவையை சீர் செய்திடக் கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அவ்வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனுப்பியுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காயல்பட்டினத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் கோஷா முறையைப் பேணி வருபவர்கள். இது அவர்களின் மத நம்பிக்கை. அதனைக் கருத்திற்கொண்டு, நமது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காயல்பட்டினத்தில் துவக்கப்பட்ட நாள் முதல் பெண்களுக்கென தனி இட வசதி செய்து, தனி பணியாளர்களை நியமித்து வங்கிச் சேவை செய்யப்பட்டு வருகிறது.
எனினும், தற்போது இந்த வங்கியின் பெண்கள் பகுதிக்கென முறையாக பணியாளர்கள் நியமிக்கப்படாமல், அவர்களை ஆண்கள் பகுதிக்கு வருமாறு வங்கி சார்பில் கூறப்படுவதாக பெண் வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எமது கட்சியின் நகர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, தங்களுக்கு வேண்டுகோள் வைக்க தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் இக்கடிதம் தங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.
எனவே, தாங்கள் அருள்கூர்ந்து இந்த ஊரின் பாரம்பரியத்தையும், கண்ணியத்தையும் தொடர்ந்து பேணிடும் வகையில், பெண்களுக்கு அவர்களின் தனிப்பகுதியிலேயே வங்கிச் சேவைகளனைத்தையும் வழங்கி உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கை அடங்கிய கடிதம், முன்னதாக வங்கியின் காயல்பட்டினம் கிளை மேலாளருக்கும் நேரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |