தமிழக அரசால் ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கான (CHIEF MINISTER'S COMPREHENSIVE HEALTH INSURANCE SCHEME) அடையாள அட்டைகள் நகரில் விநியோகிக்கப்படுகின்றன. இந்த அடையாள அட்டையினை பெற - இதற்கு முன் அமலில் இருந்த முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டைகளை காண்பிக்கலாம்.
இத்திட்டம் குறித்த முழு விபரம் - www.cmchistn.com - இணையதளத்தில் உள்ளது.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஜனவரி 11 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை ஒரு லட்சம் ரூபாய்
ஆகும். குடும்பத்திலுள்ள ஒரு நபர் இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள முழு காப்பீட்டுத் தொகையையும் பயன்படுத்திவிட்டால், அவரோ அல்லது அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களோ திட்டம் அமலில் உள்ள நான்கு ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் எந்தப் பயனையும் பெற இயலாது.
மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையான ஒரு லட்சம் ரூபாய், சில உயிர் காக்கும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் போதுமானதாக இல்லை. இந்தத் திட்டத்தில் மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை வழங்கவும் வழிவகை செய்யப்படவில்லை. ஸ்கேன் (SCAN)
போன்ற அதிக செலவு ஏற்படும் பரிசோதனைகளுக்குக் கூட இந்தத் திட்டத்தின் மூலம் கட்டணங்கள் வழங்க வழிவகை செய்யப்படவில்லை. இதனால் ஏழை நோயாளிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக கடன் வாங்கித் தான் செலவழிக்கும் நிலை இருந்தது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் பிந்தைய பாதுகாப்பு மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சை
வழங்கவும் அந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கவில்லை.
எனவே, முந்தைய அரசால் செயல்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, இப்புதிய காப்பீட்டுத் திட்டம் மூலம், ஒரு குடும்பத்திற்கு வருடம் 1 லட்சம் ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரையும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இத்திட்டத்தினால் 1 கோடியே 34 லட்சம்
குடும்பங்கள் பயன்பெறும்.
மேலும், இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில், பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும், காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் செலவழிக்கப்பட்ட கட்டணத் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மாவட்டத்திற்கு 6 மருத்துவமனைகளும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற மாநகரங்களில் கூடுதல் மருத்துவமனைகளும், என மொத்தம் 250 மருத்துவமனைகளுக்குக் குறையாமல் தமிழகம் முழுவதும் இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகள் முகாம்கள் நடத்த வேண்டுமென்ற விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின்
நோய்களைக் கண்டறியவும், தேவையான சிகிச்சைகளை உடனடியாக இப்புதிய திட்டத்தின் கீழ் அளிக்கவும் இயலும்.
இக்காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசால் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் என்ற பொதுத் துறை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு 750 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
இத்திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு முதல் காலாண்டு காப்பீட்டு தவணைத் தொகையான 183 கோடியே 64 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா - யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரிடம் ஜனவரி 11 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
மேலும், 7 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கியும், 7 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தையும் (Approval letter for treatment) வழங்கினார்.
|