காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடும் வெயில் தினமும் வாட்டி வதைத்து வருகிறது. குளிர் காலங்களில் இரண்டு நாளைக்கொருமுறை குளிப்போர் கூட தற்போதைய வெப்ப வானிலையைத் தாங்கவியலாமல் ஒரு நாளைக்கிருமுறை குளிக்கும் நிலையுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் - அதனால் ஏற்பட்ட தளர்ச்சி பொதுமக்களை பழங்கள் - குளிர்பானங்கள் விற்கப்படும் தள்ளுவண்டிகளின்பால் தானாகவே இழுத்துச் செல்கிறது.
காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கியின் எதிரிலும், இன்னும் சில பழக்கடைகளிலும் தர்பூசணி குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பழங்களின் தரத்தைப் பொருத்து ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை பழங்கள் விற்கப்படுகிறது. பழத்தை வெட்டி, பல துண்டுகளாக்கி - சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதே பழத்திலிருந்து சாறு பிழிந்து தம்ளரில் ஜூஸாகவும் வழங்கப்படுகிறது.
கொளுத்தும் வெளியலின் கோரப்பிடியிலிருந்து குளிர்ச்சியை எதிர்நோக்கும் பொதுமக்கள் இக்கடைகளில் அலைமோதத் துவங்கியுள்ளனர். தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இக்கடைகளின்பால் பொதுமக்களின் மோகம் அதிகளவில் காணப்படுகிறது.
தான் பெற்ற இன்பத்தை தன்னவளுக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்பும் பலர், பழத்தையும், பழச்சாற்றையும் பார்சலாகவும் வாங்கிச் செல்லும் காட்சி ரசிக்கும்படியாக உள்ளது. |